சென்னையில் உதவிப் பேராசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் மதிப்பெண் குறைக்கப்பட்டதாகக் கூறி 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 1093 இடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான நடவடிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மேற்கொண்டு வருகிறது.
இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கல்லூரி, அண்ணாசாலை காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரி, காமராஜர் சாலை லேடி விலிங்டன் ஆசிரியர் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் ஆகிய மூன்று கல்லூரிகளில் திங்கள்கிழமை (நவ.25) முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை லேடி வெலிங்டன் ஆசிரியர் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் 400-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் பங்கேற்றனர். இவர்களில் 100-க்கும் அதிகமானோர் பகல் 12 மணி அளவில் திடீர் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறியது:
கல்லூரி பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வுகளை தேர்ச்சி பெறுவதற்கு முந்தைய பணி அனுபவத்தை கணக்கில் எடுத்து கொள்ளவும், தொலைதூரக் கல்வி மூலம் பெறப்பட்ட எம்.ஃபில். பட்டத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவும் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
10-2-3 என்ற அடிப்படையில் நேரடியாக இளநிலைப் பட்டப்படிப்பு வரை மேற்கொள்ளப்பட்ட கல்வித் தகுதியே ஏற்றுக்கொள்ளப்படும் என்று மட்டும்தான் அரசாணை தெரிவிக்கிறது.
எனவே, 10-2-3 என்ற நேரடி படிப்புக்குப் பிறகு, தொலைதூரக் கல்வி மூலம் பெறப்படும் முதுநிலைப் பட்டப்படிப்புகளையும் பணிக்கு தகுதியானதாகவே கருத வேண்டும்.
மேலும் தகுதித்தேர்வுக்கு முந்தைய பணி அனுபவத்தையும் அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கோரிக்கைகள் கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் மற்றும், ஆசிர்யர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும். கோரிக்கை ஏற்கப்படவில்லையெனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். மூன்று மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியது:
நிபந்தனைகள் அனைத்தும் பணி தேர்வுக்கான விளம்பரத்திலேயே தெளிவாக தெரிவிக்கப்பட்டுவிட்டன. தொலைதூரக் கல்வி மூலம் பெறப்பட்ட எம்.ஃபில். கணக்கில் கொள்ளப்பட மாட்டாது என்பன உள்ளிட்ட அனைத்து நிபந்தனைகளும், அரசு உத்தரவின் பேரிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. விண்ணப்பரதாரர்கள் தேவையின்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றனர்.
No comments:
Post a Comment