Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 26 November 2013

தணிக்கைத் துறை குளறுபடி 500 பல்கலை. ஊழியர்கள் தவிப்பு

உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையின் தேவையற்ற ஆட்சேபனைக் குறிப்புகளால் தமிழகம் முழுக்க பல்கலைக்கழக பணியாளர்கள் சுமார் 500 பேர் தங்களது ஓய்வூதியப் பலன்களைப் பெறமுடியாமல் அவதிப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் 18 அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் 25 ஆயிரம் பணியாளர்கள் வேலை செய்கின்றனர். பல்கலைக்கழகங்களுக்கு மாநில அரசு வழங்கும் மானிய தொகுப்பு நிதி, மாணவர்களிடமிருந்து பெறப்படும் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம், ஆராய்ச்சி மேம்பாட்டுக்காக பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி), அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் நிதி, ஐந்தாண்டுத் திட்டங்களின் அடிப்படையில் உயர்கல்வி மேம்பாட்டுக்காக மத்திய அரசு வழங்கும் நிதி போன்றவற்றுக்கான வரவு செலவுக் கணக்குகளை உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறைதான் தற்போது தணிக்கை செய்து வருகிறது.
இந்தத் தணிக்கையை கல்வி சார் தேவை மற்றும் நோக்கங்களின் அடிப்படையில் செய்யாமல் உள்ளாட்சி நிர்வாகங்களில் சொத்து வரி, டெண்டர், வாடகை வரவுகளைத் தணிக்கை செய்வதுபோல செய்கிறார்களாம்.
இதனால், பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகும் உள்ளாட்சி தணிக்கைத் தடைகளால் பணப் பலன்களை பெறமுடியாமல் தவிப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ‘தி இந்து’விடம் தமிழக அனைத்துப் பல்கலைக்கழக அலுவலர் சங்க கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் எம்.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
உள்ளாட்சி நிர்வாகங்களில் தணிக்கை செய்வதற்கும் பல்கலைக்கழகங்களில் தணிக்கை செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையின் உயரதிகாரிதான் பல்கலைக்கழகங்களில் நிதி அலுவலராக நியமிக்கப்படுகிறார். அப்படி இருந்தும் நிதி அலுவலரின் பல்கலைக்கழக வரவு செலவுக் கணக்குகளை பல்கலை தணிக்கைப் பிரிவில் உள்ள உள்ளாட்சி தணிக்கைப் பிரிவு அதிகாரிகளே கேள்வி எழுப்புவது விந்தை.
பல்கலைக்கழகங்களில் இன்றைய வரவு செலவுகளை நாளையே தணிக்கை செய்யும் நோக்கில்தான் உடன்நிகழ் தணிக்கைத் துறை ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இன்றுவரை இந்த நடைமுறை பின்பற்றப்படாமல் மிகமிக தாமதமாகவே தணிக்கைகள் நடந்து வருகின்றன. பல்கலைக்கழகங்களில் சிண்டிகேட்தான் முதன்மை அதிகாரம் கொண்டது. சிண்டிகேட் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதில் யாரும் தலையிட முடியாது. ஆனால், சிண்டிகேட்டில் ஒப்புதல் பெறப்பட்ட பதவி உயர்வுகள், பணி நியமனங்களைக்கூட உள்ளாட்சித் தணிக்கை அதிகாரிகள் ஆட்சேபித்து குறிப்பு எழுதி இருக்கின்றனர்.
பதவி உயர்வு பெற்ற பலருக்கு அவர்களது கூடுதல் பணப் பலன்களை ரெக்கவரி போட்டிருக்கிறார்கள். இதுபோன்ற குளறுபடிகளால் தமிழகம் முழுக்க பல்கலைக்கழக ஊழியர்கள் சுமார் 500 பேர் தங்களது ஓய்வுகாலப் பலன்களை பெறமுடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். கூட்டுறவு மற்றும் அறநிலையத் துறைகளுக்கு தனியாக தணிக்கைத் துறைகள் இருக்கின்றன. அதுபோல, பல்கலைக் கழகங்களுக்கும் ‘பல்கலைக்கழக நிதித் தணிக்கை இயக்குநரகம்’ அமைக்க வேண்டும். பல்கலைக்கழக சட்ட விதிகள், சிண்டிகேட் மற்றும் மத்திய, மாநில அரசு அவ்வப்போது வழங்கும் தணிக்கை விதிகளின் அடிப்படையில் இந்த இயக்குநரகம் செயல்பட வேண்டும்.
பல்கலை தணிக்கைக்குத் தனி இயக்குநரகம் அமைப்பதன் மூலம் பல்கலைக் கழகங்களில் சட்டப்பூர்வ நிதி நிர்வாகம் மற்றும் நிதி ஒழுக்கத்தை கடைபிடிக்க முடியும். இவ்வாறு பாலசுப்பிரமணியன் கூறினார்.

No comments: