Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, 31 May 2015

‘கல்வி முறையில் புதிய செயல்முறை மாற்றங்கள் தேவை’

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், அதிக தேர்ச்சி விகிதத்தை காட்டுவது, பெற்றோருக்கு மகிழ்ச்சி தரும் தகவல். அதே சமயம், பிளஸ் 2வகுப்புகளில் இந்த மாணவர் அனைவரும், அவர்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் கல்வியை நோக்கி பயணிப்பரா என்பது, சிந்திக்க வேண்டிய விஷயம்.
ஏதாவது ஒரு பாடத்தில், 100 மதிப்பெண் பெற்றவர்கள், தமிழை முதல் பாடமாக எடுக்காமல், அதேசமயம், 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள், மாவட்ட அளவில் முதல் 10 ’ரேங்க்’ அளவில் இடம் பிடித்தவர்கள் ஆகியோருக்கு, விரும்பிய பாடம் கிடைத்து, பிளஸ் 2 படிக்க வாய்ப்பு ஏற்படும். ஆனால், 75 முதல் 80 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், பல ஆண்டுகளுக்கான கேள்வித் தாள், அதற்கான விடைகளை உருவேற்ற தவறியிருக்கலாம். தங்கள் திறமையை நம்பி வென்றவர்களாக இவர்களை பொதுவாக எடை போடலாம். ஆனால், அவர்கள் விரும்பும் கல்வி கிடைப்பது சிரமம்.

பள்ளிக்கல்வி முடிந்து, வாழ்க்கையை நோக்கிப் பயணிக்கும் இம்மாணவர்களுக்கு, ’ரேங்க்’ அல்லது இவர்கள் மதிப்பெண் சதவீதம் ஆகியவை சுமையாகலாம். இவர்களுக்கு கற்றுத் தந்த ஆசிரியர்களை அல்லது அப்பள்ளிகளை மதிப்பீடு செய்யவும், இது அளவுகோலாகாது. கல்வியில் முன்னணி மாநிலமாக உள்ளதமிழகத்தில், தனியார் பள்ளிகள் சமச்சீர் கல்வியை பின்பற்றிய போதும், 6 முதல் 14 வயது வரை உள்ளவர்களை, கட்டாயக் கல்வி சட்டப்படி சேர்ப்பதில் குளறுபடிகள் உள்ளன.
இதற்கான ஒதுக்கீட்டை, பொறியியல் கல்லூரி சேர்க்கை முறை போல, அரசே அமல்படுத்த, தனியார் பள்ளி அமைப்பு கூறிய யோசனையை, நடப்பாண்டில் எளிதில் அமலாக்கம் செய்ய முடியாது. ஊராட்சி பகுதிகளில் அமைந்த, தனியார் பள்ளிகளின் கட்டமைப்பை அங்கீகரிக்க வலியுறுத்துவதும், 10 ஆண்டுகள் ஆன, தனியார் பள்ளிகள் நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்பதுமான, இவர்கள் கோரிக்கையை, கல்வித்துறை பரிசீலித்து, இப்பள்ளிகள் இயங்கும் விதத்தை ஆய்வு செய்தாலும் நல்லதே.
சி.பி.எஸ்.இ., கல்விக்கும், பல்வேறு தொழில்நுட்ப திறன் கூடிய கல்விக்கும், முக்கியத்துவம் அதிகரிக்கும் சூழ்நிலையில், புதிய செயல்முறை மாற்றங்கள் தேவை. மாநிலம் சம்பந்தப்பட்ட முன்னுரிமைத் துறை என்பதால், அரசு பள்ளிகள் மட்டும் அல்ல; தனியார் பள்ளிகள் குறித்தும், ஒரு அணுகுமுறை வர வேண்டும். அதிக அளவில் மாணவர் தேர்ச்சியை முடிவு செய்யும் வளர்ச்சி பெற்ற சூழ்நிலையில், அடுத்தடுத்த பிரச்னைகளை ஆராய வேண்டிய நேரம் இது. அதன் மூலம், மற்ற மாநிலங்களுடன் போட்டியிடும் தகுதிக் கல்வி தமிழகத்தில் உருவாக வாய்ப்பு வரும்.

No comments: