தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற இணையவழி கலந்தாய்வில் 503 கணினி பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
உயர் நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக, 133 பேருக்கான பணி நியமன ஆணை தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் கணினி பயிற்றுநர்கள் 652 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்தக் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்குவதற்கான இணையதள கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெற்ற கலந்தாய்வில் கணினி பயிற்றுநர்கள் பங்கேற்றனர்.
இதில் ஆதரவற்ற விதவைகள், முன்னாள் ராணுவ வீரர்கள், கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான முன்னுரிமைப் பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்க்க வேண்டும் என 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெற்றுள்ளனர். இதன் காரணமாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 643 பேரில் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 133 பேருக்கு பணி நியமன ஆணை தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இறுதி உத்தரவின் அடிப்படையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் உறுதிசெய்யப்பட்ட தேர்வுப் பட்டியல் பெறப்பட்ட பின்னரே பணி நியமன ஆணை வழங்கப்படும்.
முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 133 பேரைத் தவிர மீதமுள்ளவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இவர்களில் 491 பேருக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களிலேயே பணி நியமனம் கிடைத்துள்ளது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment