தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வையற்ற பட்டதாரிகள் சென்னையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களில் ஏழு பேர், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகித்த சங்கத்தின் தலைவர் செல்வராஜ், நிர்வாகி ஆனந்த் ஆகியோர் கூறியது:
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துக் காத்திருக்கும் தகுதியுடைய பார்வையற்ற அனைவருக்கும் உடனடியாக பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும்.
"நெட்', "செட்' தகுதித் தேர்வுகள் முடித்து நீண்ட காலமாக காத்திருக்கும் தகுதிவாய்ந்த பார்வையற்ற பட்டதாரிகளுக்கு உதவிப் பேராசிரியர் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால், எங்களுடைய கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றித்தரப்படவில்லை. எனவே, தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்த வாய்ப்பு கேட்டு இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை, எங்களில் ஏழு பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்றனர்.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணைய அதிகாரிகள் போராட்டக்காரர்களைச் சந்தித்து பேச்சு நடத்தினர்.
ஓரிரு நாளில் பேச்சுவார்த்தை மூலம் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணப்படும் என அவர்கள் உறுதியளித்தனர்.
ஆனால், அதை ஏற்க மறுத்த பார்வையற்ற பட்டதாரிகள் முதல்வரைச் சந்திக்க அனுமதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறி போராட்டத்தைக் கைவிட மறுத்தனர்.
No comments:
Post a Comment