Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 16 October 2014

TRB: உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பும் பணியை விரைவுபடுத்த ஆலோசனை

கல்லூரி உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்புவது என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற உயர் கல்வித் துறை ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் உயர் கல்வித்துறை செயலர் ஹேமந்த் குமார் சின்ஹா, தொழில்நுட்ப கல்வி ஆணையர் குமார் ஜெயந்த், உயர் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் பழனியப்பன் அளித்த பேட்டி:
உயர் கல்வித் துறையில் தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவது, பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவது என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட 53 புதிய கல்லூரிகளில், இதுவரை 40 கல்லூரிகளுக்குக் கட்டடங்கள், பிற உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் பணிகள் நிறைவுபெற்றுள்ளன.

மீதமுள்ள 13 கல்லூரிகளுக்கு கட்டடங்கள் உள்ளிட்ட வசதிகளை விரைவாக மேம்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,093 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

இதுபோல், தற்போது காலியாக உள்ள 1,613 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்கள், பாலிடெக்னிக்குகளில் உள்ள 613 காலிப் பணியிடங்கள், பொறியியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பும் பணியை விரைவு படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

விரைவில் இந்த காலிப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டுவிடும் என்றார்

No comments: