Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 2 October 2014

TRB: உதவிப் பேராசிரியர் நியமனம்: ஆங்கிலம் உள்ளிட்ட 4 பாடங்களில் விண்ணப்பித்தோருக்கு அக்.13 முதல் நேர்காணல்


அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனத்துக்காக ஆங்கிலம் உள்ளிட்ட 4 பாடங்களுக்கான நேர்காணல் அக்டோபர் 13 முதல் 17 வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 
ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல், மீன் வளர்ப்பு ஆகிய பாடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் சான்றிதழ் சரிபார்ப்பில் கல்வித் தகுதி (9), பணி அனுபவம் (15) ஆகியவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது.
மொத்தம் 24 மதிப்பெண்ணுக்கு விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தனித்தனியே அழைப்புக் கடிதம் அனுப்பப்படும். எனினும், அழைப்புக் கடிதங்களுக்காகக் காத்திருக்காமல் விண்ணப்பதாரர்கள் இணையதளத்திலிருந்து அவற்றைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
பிற பாடங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,093 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுகின்றனர். இந்தப் பணியிடங்களுக்கான நேர்காணல் 2014, ஆகஸ்ட் 8-ஆம் தேதி தொடங்கியது.
நேர்காணலுக்கு 10 மதிப்பெண் வழங்கப்படுகிறது. அதன்பிறகு, மொத்தம் 34 மதிப்பெண்ணுக்கு விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணி நியமனம் இருக்கும்.
சட்டக் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வு: முக்கிய விடைகள் வெளியீடு
அரசு சட்டக் கல்லூரிகளில் 50 மூத்த விரிவுரையாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.
இந்தப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு செப்டம்பர் 21-ஆம் தேதி நடைபெற்றது. 131 பேர் இந்தத் தேர்வை எழுதினர்.
இந்தத் தேர்வுக்கான முக்கிய விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டன. முக்கிய விடைகள் தொடர்பாக ஆட்சேபம் ஏதும் இருந்தால் உரிய ஆவணங்களுடன் அக்டோபர் 13-ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் நேரிலோ அல்லது அஞ்சலிலோ சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்த 281 பேரில் 150 பேர் உரிய தகுதி இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது

No comments: