மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழகத்திலிருந்து எழுதிய மாணவர்களில் இரண்டு தாள்களையும் சேர்த்து வெறும் 89 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் இரண்டு தாள்களையும் 5,767 பேர் எழுதினர்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர் ஆவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சி.பி.எஸ்.இ. பாடத் திட்டப் பள்ளிகள், கேந்த்ரிய வித்யாலய பள்ளிகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றுவதற்கு சி.பி.எஸ்.இ. நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது.
முதல் தாள் தேர்வை நாடு முழுவதும் 2 லட்சத்து 6,145 பேர் எழுதினர். இதில் 24,629 பேர் தேர்ச்சி பெற்றனர். இரண்டாம் தாள் தேர்வை 4 லட்சத்து 54 ஆயிரத்து 268 பேர் எழுதினர். இதில் 12,843 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்ட வாரியாக இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது.
அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள்: தமிழகத்தில் மொத்தம் 5,767 பேர் தேர்வை எழுதினர். இதில் முதல் தாள் தேர்வை 1,210 பேர் எழுதினர். முதல் தாள் தேர்வு எழுதியவர்களில் 39 பேர் (3.22 சதவீதம்) மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 11 மாவட்டங்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.
இரண்டாம் தாள் எழுதிய 4,557 பேரில் 50 பேர் மட்டுமே (1 சதவீதம்) தேர்ச்சி பெற்றனர். இதிலும் 11 மாவட்டங்களில் யாரும் தேர்ச்சி பெறவில்லை.
வேலூர், விருதுநகர், திருவாரூர், நீலகிரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் யாரும் தேர்ச்சி பெறவில்லை.
No comments:
Post a Comment