மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட கல்விச் சான்றிதழ்களில் மாணவர்களின் சாதி மற்றும் இடஒதுக்கீடு தொடர பான விவரங்களை குறிப்பிடுவதற்கு சிபிஎஸ்இ தடை விதித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பை முடிக்கும்போது அவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) வழங்கப்படும். அதில் அவர்கள் படித்த பள்ளியின் பெயர், படிப்பு காலம், அங்க அடையாளங்கள், சாதி பெயர், இடஒதுக்கீடு (எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி) ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். மதிப்பெண் சான்றிதழில் சாதி, இடஒதுக்கீடு விவரங்கள் பொதுவாக குறிப்பிடப்படுவதில்லை. மாணவர்கள் மேற்படிப்புக்குச் செல்லும்போது, சாதி சான்றிதழ் தேவைப்படும். அப்போது, அதற்காக தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பிக்கும்போது, சாதி, இடஒதுக்கீடு விவரங்கள் அடங்கிய பள்ளி மாற்றுச் சான்றிதழ் முக்கிய ஆதாரமாக கொள்ளப்படுகிறது. மாற்றுச் சான்றிதழ் நகலை சாதி சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் இணைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கும். மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் சாதி, இடஒதுக்கீடு விவரங்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். ஆனால், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் படிக்கும் மாணவர்களைப் பொருத்தவரையில், எல்லா சிபிஎஸ்இ பள்ளிகளும் இந்த விவரங்களை மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடுவது கிடையாது. ஒருசில பள்ளிகள் மட்டும் குறிப்பிட்டு வருகின்றன. சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதற்கு முன்பாக அவர்களின் பெயர், தந்தை பெயர், தாய் பெயர், பாடங்கள், சாதி, இடஒதுக்கீடு (எஸ்சி, எஸ்டி, ஓபிசி) போன்ற விவரங்கள் அவர்களிடமிருந்து பெற்று ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். பெயர், பெற்றோர் பெயர், தேர்வெழுதும் பாடங்கள் போன்ற பெரும்பாலான விவரங்கள் தேர்வுக்காகவும், சான்றிதழ் வழங்குவதற்காகவும் பெறப்படுகின்றன. சாதி, இடஒதுக்கீடு தொடர்பான தகவல்களை மாணவர்களிடம் இருந்து பெற்றாலும் அவற்றை மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட கல்விச் சான்றிதழ்களில் குறிப்பிடக்கூடாது என்று அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ சென்னை மண்டல அதிகாரி டி.டி.சுதர்சன் ராவிடம் கேட்டபோது, “மதிப்பெண் சான்றிதழ்களில் சாதி, இடஒதுக்கீடு தொடர்பான விவரங்கள் குறிப்பிடப்படுவது இல்லை. ஆனால், ஒருசில பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ்களில் இந்த விவரங்களை குறிப்பிட்டு விடுகிறார்கள். அவற்றை தவிர்ப்பதற்காக இந்த உத்தரவு வெளியிடப்பட்டிருக்கலாம்” என்று தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment