சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க உரிய அதிகாரியாக பள்ளிக் கல்வி இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார் என தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை திருமுல்லைவாயிலைச் சேர்ந்த ஏ.வி.பாண்டியன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
கடந்த 2009-ஆம் ஆண்டு இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. இதில், மாநிலக் கல்வி முறைப் பள்ளிகள் தவிர அனைத்துப் பள்ளிகளும் மாநில அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழக அரசு கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் தொடர்பாக சில விதிமுறைகளை உருவாக்கியது. அதில், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்சி பாடத் திட்டத்தில் இயங்கும் பள்ளிகள் தமிழக அரசின் அங்கீகாரம் பெற வேண்டும் என எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
எனவே, சிபிஎஸ்இ பள்ளிகள் போன்ற அங்கீகாரம் பெறாத அனைத்து வகையான பள்ளிகளும், அங்கீகாரம் பெறும் வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டும்.
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு உரிய அதிகாரியை நியமிக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, அரசுத் தரப்பில் அரசிதழ் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், சிபிஎஸ்இ போன்ற பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கு உரிய அதிகாரியாக பள்ளிக் கல்வி இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சிபிஎஸ்இ பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கு ஏற்றவாறு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment