தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் வழங்கப்படும் பல்வேறு வகையான படிப்புகள் எந்தெந்தப் படிப்புகளுக்கு இணையானவை என்பதை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தக் கூடிய ஒருங்கிணைந்த பாடத்திட்ட விவரம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. வரும் டிசம்பர் மாதத்தில் இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிடும். உடனடியாக அந்த விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விடும் என தமிழ்நாடு உயர் கல்வி கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்தனர். பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கலை, அறிவியல் கல்லூரிகளில் அவ்வப்போது புதிய பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அறிமுகம் செய்யப்படும் சில பட்டப் படிப்புகளைப் படித்த மாணவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தும் கல்லூரி உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடத் தேர்வுகளில் பங்கேற்க முடியாமல் போகிறது. இவர்களுடைய பட்டப் படிப்புகளைத் தகுதியற்றவையாக ஆசிரியர் தேர்வு வாரியம்புறக்கணிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பாடத்திட்ட விவரத்தை உருவாக்கும் பணியை தமிழ்நாடு உயர் கல்வி கவுன்சில் மேற்கொண்டு வருகிறது.இதுகுறித்து அந்த கவுன்சிலின் அதிகாரி ஒருவர் கூறியது: ஒருங்கிணைந்த பாடத்திட்ட விவரங்களைத் தயாரிக்கும் பணி வரும் டிசம்பரில் முடிக்கப்பட்டு விடும். பின்னர் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அரசாணையாக வெளியிடப்படும். இதில் தொழில்நுட்பம், கணிதம், வணிகவியல், சமூக அறிவியல்,உயிரியல், கல்வி, மொழிகள் உள்பட 8 தலைப்புகள் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு தலைப்பின் கீழும், தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வழங்கப்படும் தொடர்புடைய படிப்புகள் அனைத்தும் கொண்டு வரப்படும்.மேலும் மூலப் படிப்புக்கு, அதன் கீழ் வரும் பிற படிப்புகள் எந்த அளவுக்கு இணையானவை என்பது தெரிவிக்கப்படும். உதாரணமாக, வணிகவியல் தலைப்பின் கீழ் எம்.காம்., எம்.சி.எஸ்., எம்.காம். (சி.எஸ்.), எம்.ஏ. (சி.எஸ்.) உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் கொண்டுவரப்படும். அதோடு, மூலப் படிப்பான எம்.காம். முதுநிலை பட்டப் படிப்புக்கு எம்.சி.எஸ்., உள்ளிட்ட பிற படிப்புகள் எத்தனை சதவீதம் இணையானது என்பது தெரிவிக்கப்பட்டிருக்கும். இதில் மூலப் படிப்புகளுக்கு 75 சதவீதம் இணையான படிப்புகளை மட்டுமே, அந்தந்தத் துறைகளுக்கு தகுதியான படிப்புகளாக ஆசிரியர் தேர்வு வாரியம் கருத்தில் கொள்ளும். இந்தவிவரங்கள் வெளியிடப்படுவதன் மூலம், மாணவர்களிடையே எழும் குழப்பத்துக்கு தீர்வு கிடைக்கும் என்பதோடு, படிப்புகளில் சேருவதற்கு முன்னரே அவை எதற்கு இணையானவை என்பதை அறிந்து சேர முடியும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment