உயர் கல்வித் துறையில் எழுந்துள்ள புதிய சவால்களைத் திறம்பட சமாளிக்கும் வகையில் "பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சட்டம் 1956'-ல் 4-ஆவது முறையாக திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க 4 பேர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
யுஜிசி சட்டம் 1956-இல் நடைமுறைக்கு வந்தது. அப்போது, நாடு முழுவதும் 20 பல்கலைக்கழகங்கள், 500 கல்லூரிகள் மட்டுமே இருந்தன. 2.1 லட்சம் மாணவர்கள் மட்டுமே உயர் கல்வி பயின்றனர்.
அதன்பிறகு, யுஜிசி சட்டத்தில் மூன்று முறை திருத்தம் செய்யப்பட்டது. கடைசியாக கடந்த 1985-ல்
சட்டத் திருத்தம் செய்யப்பட்டது.
ஆனால், இப்போது பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துவிட்டது. நாடு முழுவதும் இப்போது 726 பல்கலைக்கழகங்கள், 38,000 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. ஆண்டுக்கு 2.8 கோடி மாணவ, மாணவிகள் இவற்றில் சேர்க்கை பெற்று வருகின்றனர்.
அதேநேரம், முறைகேடுகளும் அதிகரித்துள்ளன. தனியார் பல்கலைக்கழகம் ஒன்று ஆராய்ச்சிப் படிப்புகளை வியாபார மயமாக்கிய விவகாரம் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது.
இதுபோன்ற புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், விதிகளை தனியார் பல்கலைக்கழகங்கள் முறையாக பின்பற்றுகின்றனவா என்பதை உறுதி செய்யவும் போதுமான நடைமுறைகள் யுஜிசி-யிடம் இப்போது இல்லை.
எனவே, யுஜிசி-யை மறுசீரமைப்பு செய்வது அவசியமாகிறது. இதற்காக "யுஜிசி சட்டம் 1956'-ல் என்னென்ன திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்ய யுஜிசி-யின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ஹரி கௌதம் தலைமையில் 4 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு 6 மாதங்களில் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment