ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு மூன்று வாரங்களில் பணி நியமன உத்தரவு வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படாதது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. கே.பாலபாரதி கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதம் புதன்கிழமை நடைபெற்றது. அதில் பேசிய பாலபாரதி, தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு அளிக்கப்பட்டதால் சுமார் 40 ஆயிரம் பேர் கூடுதலாகப் பயன்பெற்றுள்ளனர். மொத்தம் 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, பணி நியமனத்துக்குரிய உத்தரவுகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் வீரமணி பேசியது:
முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட மதிப்பெண் தளர்வால் தகுதித் தேர்வு தாள் ஒன்றில் 17 ஆயிரத்து 996 பேர், தாள் இரண்டில் 25 ஆயிரத்து 187 பேர் என மொத்தம் 43 ஆயிரத்து 183 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் ஏற்கெனவே தேர்ச்சி பெற்றிருந்த 29 ஆயிரத்து 518 பேருடன் கூடுதலாக தேர்ச்சி பெற்ற நபர்களுடன் சேர்த்து மொத்தம் 72 ஆயிரத்து 701 பேரின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முடிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை ஆகியவற்றில் 80 வழக்குகள் வரை உள்ளன. இந்த வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வழக்குகளின் தீர்ப்புகள் அனைத்தும் அரசுக்குச் சாதகமாகவே உள்ளன. எனவே, இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் தேர்ச்சி பெற்றவர்களை பணியில் நியமிப்பதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.
No comments:
Post a Comment