உயர்கல்வி பயிலும் எஸ்சி, எஸ்டி பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு முழு கல்லூரிக் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. பொறியியல் கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில் இது குறித்த அறிதல் மாணவர்களுக்கு அவசியப்படுகிறது. இந்தச் சலுகையை பெறுவது எப்படி, அதற்கான தகுதிகள் குறித்த விவரங்கள்..
அரசு நிர்ணயித்திருக்கும் கல்விக் கட்டணம், நூலகக் கட்டணம், விளையாட்டுக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்டவை இந்தச் சலுகைக் கட்டணங்களுக்குள் அடங்கும். புத்தகக் கட்டணம், விடுதிக் கட்டணம் போன்ற கட்டணங்கள் இந்தச் சலுகைக்குள் வராததால் அவற்றை மாணவர்கள்தான் செலுத்த வேண்டும்.
கலந்தாய்வின் ஒதுக்கீட்டு கடிதத்துடன் சாதிச் சான்றிதழை காண்பித்தாலே கல்லூரிகள், சலுகைக்குள் அடங்கும் கட்டணங்களை மாணவர்களிடம் பெறக்கூடாது. ஆராய்ச்சிப் படிப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தும் என ஆதி திராவிடர் நல இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
தேவையானத் தகுதிகள்
சலுகையைப் பெற ஆண்டு வருமானம், பழங்குடியினர், ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தால் இரண்டரை லட்சத்திற்குக் குறைவாகவும், மதம் மாறிய கிறிஸ்தவர்களாக இருந்தால் 2 லட்சத்திற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.
அங்கீகாரம் பெற்றக் கல்லூரிகளில் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் சேர்பவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படும். மருத்துவம், பொறியியல், சட்டம், கலை அறிவியல் படிப்புகள், ஆசிரியர் கல்வி, வேளாண் படிப்புகள் உள்ளிட்ட பெரும்பாலான படிப்புகளுக்கு இந்தச் சலுகை பொருந்தும். ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு மட்டுமின்றி நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தும்.
No comments:
Post a Comment