மதுரை காமராஜ் பல்கலையில் எம்.எட்., படிப்பு துவங்க வேண்டும் என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். இப்பல்கலை அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஏராளமாக உள்ளன.
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 10 ஆயிரத்திற்கும் மேல் ஆசிரியர்கள் இந்த மாவட்டங்களில் பணியாற்றுகின்றனர். பெரும்பாலும், பி.எட்., முடித்த ஆசிரியர்கள் கூடுதல் தகுதி மற்றும் ஊக்கத் தொகை பெறுவதற்கு, எம்.எட்., படிப்பார்கள். இப்படிப்பு தற்போது இக்னோ, கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன் ஆகிய பல்கலைகளில் மட்டும் உள்ளன. மதுரை காமராஜ் பல்கலையில் இப்படிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
எம்.எட்., முடித்தால் ரூ.2,500 முதல் 3 ஆயிரம் வரை ஆசிரியருக்கு ஊக்கத் தொகை கிடைக்கும். மேலும், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் பி.எட்., கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக பணியாற்றும் வாய்ப்பு ஆசிரியர்களுக்கு கிடைக்கும்.
எனவே, தொலை நிலைக் கல்வியில் பல்வேறு புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தும் மதுரை காமராஜ் பல்கலையில், எம்.எட்., துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் முருகன், தலைவர் நாக சுப்பிரமணியன் கூறுகையில், "எம்.எட்., என்பது ஒருசில பி.எட்., கல்லூரிகளில் மட்டுமே உள்ளன. அதிக ஆசிரியர்கள் இப்படிப்பை படிக்க தயாராக உள்ளனர். காமராஜ் பல்லையில் மாலைநேர கல்லூரியில் ரெகுலராகவோ அல்லது தொலைநிலைக் கல்வியிலோ இப்படிப்பை துவங்க நடவடிக்கை எடுத்தால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பயன் பெறுவர்" என்றனர்.
தொலைநிலைக் கல்வியில் எம்.எட்., துவங்குவதற்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலிடம், அனுமதி கோரப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் எம்.எட்., துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பல்கலை வட்டாரம் தெரிவித்தன.
No comments:
Post a Comment