அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்டோருக்கான பிரிவுகளில் நிலுவையில் இருக்கும் காலிப் பணியிடங்களை ஆறு மாதங்களுக்குள் நிரப்ப தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, பெருங்களத்தூரைச் சேர்ந்த மத்திய, மாநில அரசுகளின் தாழ்த்தப்பட்டோர் ஊழியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் எஸ்.கருப்பையா உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், தாழ்த்தப்பட்டோருக்கான பிரிவுகளில் நிலுவையில் உள்ள காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரினார்.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது. விசாரணையின்போது அரசு தரப்பில் அரசு வழக்குரைஞர் ஆஜராகி, அனைத்துத் துறைகளிலும் தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவீதமும், பழங்குடியினருக்கு 1 சதவீதமும் வேலைவாய்ப்பு வழங்குவதற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பற்றாக்குறை காலியிடங்களை ஆய்வு செய்து உறுதிப்படுத்துவதற்காக அரசாணைப்படி உயர்நிலைக் குழு கடந்த 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ஆம் தேதி அமைக்கப்பட்டது.
இது தொடர்பாக, அனைத்து துறைச் செயலர்களுடன் அந்தக் குழு கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்கும். அதன் பிறகு, தகுந்த உத்தரவு பிறப்பிப்பதற்காக அந்த அறிக்கை அரசுக்கு அனுப்பப்படும் என தெரிவித்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அந்த அனைத்துப் பணிகளையும் உயர் நிலைக்குழு விரைவில் முடிக்க வேண்டும். அதன் பிறகு, பணிகளை நிரப்புவது தொடர்பான நடவடிக்கைகளை ஆறு மாதங்களுக்குள் தமிழக அரசு முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
No comments:
Post a Comment