Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday 10 July 2014

கல்விக் கடன் பெற 60 விழுக்காடு மதிப்பெண்: வங்கியின் நிபந்தனை நிராகரிப்பு

கல்வி கடன் பெற 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்ற வங்கியின் நிபந்தனையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. கல்வி கடன் கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு (ஐ.ஓ.பி.) உத்தரவிட்டது.
திருப்பூர் மாவட்டம் பெரமநல்லூரைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பிளஸ் 2 படிப்பில் 59 சதவீத மதிப்பெண் பெற்றார். பொறியியல் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது. கல்விக் கடன் 1.88 லட்சம் ரூபாய் வழங்குமாறு பெரமநல்லூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் விண்ணப்பித்தார்.

குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் தான் கல்வி கடன் பெற தகுதியுள்ளது என வங்கி தரப்பில் கூறப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ரவி மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி கல்வி கடன் கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து வழங்கும்படி உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வங்கி மேலாளர் அப்பீல் மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் என். பால்வசந்தகுமார், சத்திய நாராயணன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களும் கல்விக் கடன் பெற உரிமை உள்ளது என ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளின் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் 2012 செப்டம்பரில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் வகுக்கப்பட்ட வழிமுறைகளில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் எடுத்தவர்களுக்கு தான் கல்விக் கடன் வழங்கப்படும் என கூறப்படவில்லை.
மத்திய நிதி அமைச்சரின் நடவடிக்கையால் ஆய்வுக்கூட்டத்தில் திருத்தி அமைக்கப்பட்ட கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவில் குறுக்கிட எந்த காரணமும் இல்லை. அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
எனவே மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலித்து தகுதி அடிப்படையில் கல்விக் கடன் வழங்க வேண்டும். இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

No comments: