அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு புதிதாக 3,459 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:
பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.62,583 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வரலாற்று சாதனை புரிந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. எனவே, தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023-ல் பள்ளிக்கல்வித் துறை தனது இலக்கை முன்கூட்டியே எட்டிவிடும். மாணவர்களின் நலத் திட்டங்களுக்காக மட்டும் ரூ.2,557 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் அரசுப் பள்ளிகளில் 53,288 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப் பட்டுள்ளன. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் நடப்பு கல்வி ஆண்டில் (2014-15) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் 74,177 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில், இந்த ஆண்டு 100 அரசுப் பள்ளிகளுக்கு ரூ.20 லட்சம் செலவில் விளையாட்டு சாதனங்கள் வழங்கப்படும். கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் நலிவடைந்த வகுப்பு மாணவ, மாணவிகள் 32,563 பேருக்கு ரூ.1.63 கோடி செலவில் செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் ரூ.32 லட்சம் செலவில் அறிவியல் கண்காட்சி நடத்தப்படும். மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவதற்காக, ரூ.5.35 கோடி செலவில் 202 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இந்த இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும்.
நடப்பு கல்வி ஆண்டில் 2,489 பட்டதாரி ஆசிரியர்கள், 952 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 3,459 ஆசிரியர் பணியிடங்களும் 75 ஆசிரியர் சார்ந்த பணியிடங்களும், 340 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் நிரப்பப்படும்.
நூலகத்துக்கு வர இயலாத முதியவர்கள், உடல்நலமற்றவர்கள், இல்லத்தரசிகள் பயன்பெறும் வகையில் தருமபுரி, திருவள்ளூர், வேலூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் ரூ.70 லட்சம் செலவில் நடமாடும் நூலகங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.
No comments:
Post a Comment