Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, 14 June 2014

TNPSC: தமிழகம் முழுவதும் இன்று வி.ஏ.ஓ தேர்வு: 243 மையங்களில் 10 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

TNPSC Logo

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெறவுள்ள கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வினை 10 லட்சத்து 8 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். இதற்காக, மாநிலம் முழுவதும் 243 தேர்வு மையங்களில் 3 ஆயிரத்து 628 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. சில தேர்வுக் கூடங்கள் வெப்கேமிரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வி.சோபனா தெரிவித்துள்ளார்.

இது குறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகம் முழுவதும் உள்ள தேர்வுக் கூடங்கள் ஒளிப்பதிவு செய்யப்படும். மேலும், அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வுக் கூடத்தின் நடவடிக்கைகளையும் கண்காணித்து தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலருக்கு அறிக்கை அனுப்ப வசதியாக, தேர்வுக் கூடத்துக்கு ஒரு ஆய்வு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதைத் தவிர்த்து, அனைத்து தேர்வு மையங்களையும் ஆய்வு செய்ய மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அவர்களுக்கு இணையான பதவியில் உள்ள அலுவலர்களைக் கொண்டு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
மிகவும் சர்ச்சைக்குரிய தேர்வுக்கூடங்கள் அனைத்தும் வெப்கேமிரா மூலம் தேர்வாணைய அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படும்.
நன்கு கவனிப்பது அவசியம்: ஒரு மாவட்டத்தில் அல்லது தாலுகாவில் ஒரே பெயரைக் கொண்ட சில தேர்வுக் கூடங்கள் அமைந்துள்ளன. எனவே, விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுக் கூட முகவரியை நன்கு கவனித்து சரியான தேர்வுக் கூடத்துக்கு உரிய நேரத்தில் சென்றடைய வேண்டும். தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடம் குறித்து சந்தேகம் ஏதேனும் இருந்தால், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுக்கூட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
செல்போன், கால்குலேட்டருக்கு தடை: தேர்வு எழுதச் செல்லும் விண்ணப்பதாரர்கள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்லக் கூடாது. அவ்வாறு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது விடைத்தாள்கள் செல்லாததாக்கப்படும். தேர்வு எழுவதில் இருந்து விலக்கி வைக்கப்படுவர் என்று தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சோபனா எச்சரித்துள்ளார்.

No comments: