சர்வதேச தொழிலாளர் அமைப்பு கடந்த 2001-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளைக் காப்பதற்காக ஒரு சாசனம் இயற்றியது. இந்த நாளே சர்வதேச குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினமாக அனசரிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் 12.6 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர் என்று சர்வதேச மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர் என்று கணக்கெடுப்பு கூறுகிறது. 5 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளே குழந்தை தொழிலாளர்களாக கருதப்படுகின்றனர். குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் இன்றளவும் அது முற்றிலுமாகத் தடுக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
விவசாயம், செங்கல் சூளை, குவாரிகள், பட்டறைகள், உணவு விடுதிகள் போன்றவற்றில் குழந்தைகள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும் வெளிமாநிலங்களில் இருந்து இதற்காக குழந்தைகள் கடத்தி வரப்படுவதாகவும் அவர்கள் பிச்சை எடுக்க வைக்கப்படுவதாகவும் கூறுகிறார்கள் குழந்தை தொழிலாளர்களை மீட்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்.
குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு மற்றும் முறைபடுத்துதல் சட்டம் 1986-ன் படி 5 வயது முதல் 14 வயது குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவோருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் 3 மாதங்கள் சிறைதண்டனையும் விதிக்கப்படும். மேலும் அரசு ஊழியர்கள் குழந்தைகளை பணி அமர்த்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பாளர்கள்.
1098 என்ற எண்ணில் புகார் கூறலாம்
5 வயது முதல் 14 வயது குழந்தைகள் கொத்தடிமைகளாகவோ தொழிலாளர்களாகவோ நடத்தப்படுவதை கண்டால் பொதுமக்கள் உடனடியாக 1098 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று குழந்தைகள் நல அமைப்புகள் தெரிவித்துள்ளன. மீட்கப்படும் குழந்தைகள், குழந்தைகள் நல குழு மூலம் பாதுகாக்கப்பட்டு அரசு காப்பகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.
No comments:
Post a Comment