Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 20 June 2014

பள்ளி மாறுதலை தவிர்க்க அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்யும் தில்லுமுல்லு!

பணி நிரவல் மாறுதலை தவிர்க்க, அரசு ஆரம்ப பள்ளிகளில் வயது குறைந்த மாணவர்களை சேர்த்து, எண்ணிக்கையை உயர்த்தி காட்டும் சுயநல ஆசிரியர்களால், பாடத்தை கிரகிக்க முடியாமல், வெறுப்பில் பள்ளியை விட்டு வெளியேறும் நிலையில் குழந்தைகள் உள்ளன.
மாநில, மத்திய அரசின் பல்வேறு பாடத்திட்டங்களை நடத்தும் தனியார் மெட்ரிக்., பள்ளிகள், முதல் வகுப்பில் மாணவரின் பிறப்பு சான்று பெற்று, 5 வயதை உறுதி செய்து சேர்க்கின்றன. அதற்கு குறைவான வயது உடையவர்களை எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்பில் சேர்க்கின்றனர்.

ஆனால், ஒரு சில அரசு ஆரம்ப பள்ளிகளில், 5வயது பூர்த்தி அடையாத சிறு குழந்தைகளை பிறப்பு சான்று எதுவும் இல்லாமல், ஆசிரியரே ஒரு தேதியை குறிப்பிட்டு 5வயதை பூர்த்தி அடைந்து விட்டதாக, 3 வயது, 4 வயதுக்கு உட்பட்டவர்களை, முதல் வகுப்பில் சேர்த்து கல்வி துறைக்கு கணக்கு காட்டுகின்றனர்.
விழிப்புணர்வு இல்லாத ஏழை பெற்றோரும், தன் பிள்ளை பள்ளிக்கூடம் போனால் சரி என்ற மன நிலையில் அனுப்பி விடுகின்றனர். ஆனால் அதில் உள்ள சூட்சமம், அதன் பின் விளைவுகளை பற்றி பெற்றோர் அறிவது இல்லை.
வயது குறைந்த குழந்தைகளை, முதல் வகுப்பில், ஏன் ஆசிரியர்கள் சேர்க்கிறார்கள் என்றால், 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என 1:30 வகிதாச்சாரத்தை அரசு நிர்ணயித்துள்ளது. இந்த விகிதப்படி மாணவர் எண்ணிக்கை குறைந்து இருந்தால் அந்த பள்ளியில் உபரியாக உள்ள ஆசிரியரை, பணி நிரவலில் வேறு பள்ளிக்கு மாறுதல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். வரும் 24ல் ஆசிரியர் பணி நிரவல் நடைபெற உள்ளது.
எனவே, மாறுதலை தவிர்ப்பதற்காக சில அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5வயது பூர்த்தியாகாத மாணவர்களை முதல் வகுப்பில் சேர்க்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பே மாணவர்கள் சேர்க்கையின் போது பிறப்பு சான்று அவசியம் என சட்டம் உள்ளது. 
இதை ஆசிரியர்கள் பின்பற்றுவது இல்லை. பள்ளி ஆய்வு, ஆண்டு ஆய்வுக்கு செல்லும் உதவி கல்வி அலுவலர்களும், மாணவர் பிறப்பு சான்றுப்படி சேர்க்கை நடந்துள்ளதா என்பதையும் கவனிப்பது இல்லை.

ஆசிரியர் பணியிடத்தை தக்க வைப்பதற்காக சேர்க்கப்படும் மாணவர்கள், ஆகஸ்ட்டில் 10 சதவீதம் பேர் இடைநின்று விடுவார்கள். செப்டம்பரில் பள்ளிக்கு வரவில்லை கூறி பெயரை நீக்கி விடுகின்றனர். அதற்குள் பணி நிரவல் மாறுதல், கவுன்சிலிங் எல்லாம் முடிந்துவிடும். முதல் வகுப்பில் சேர்க்கும் குழந்தை , பாடத்தை கிரகிக்கும் தன்மை இல்லாமல் பள்ளியை வேண்டாத இடமாக கருதி பாடத்தில் கவனம் செலுத்துவதில்லை.
பெற்றோர், ஆசிரியர் வற்புறுத்தலால் பள்ளிக்கு செல்லும் பல குழந்தைகள் காலப்போக்கில் பள்ளி செல்லும் ஆர்வம் குறைந்து, ஊர் சுற்ற ஆரம்பித்து கடைசியில் குழந்தை தொழிலாளராக மாறி விடுகின்றன. இந்நிலையை போக்க பள்ளிகளில் ஆய்வுக்கு செல்லும் கல்வித்துறை அதிகாரிகள், மாணவர் சேர்க்கை பிறப்பு சான்றுடன் நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
இன்று 100 சதவீத பிரசவம் மருத்துவமனைகளில் நடப்பதால், சான்று பெறுவதில் பெற்றோருக்கு எந்த சிரமம் இருக்காது. குழந்தையின் பிறப்பு சான்றுப்படி, ஜூன் முதல் வகுப்பில் சேர்க்கைக்கு வயது குறைவாக இருந்தால், உதவி கல்வி அலுவலரின் அனுமதி பெற்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நாளில் சேர்க்க வாய்ப்பு உள்ளது.
இந்த நடைமுறைகளை பல அரசு பள்ளிகளில் பின்பற்றுவது இல்லை. ஒருசில ஆசிரியரின் சுயநலத்திற்காக, குறைந்த வயது மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் தவறும் தொடர்கிறது.
பிறப்புசான்று பெறாமல் சேரும் மாணவர்கள், முறையாக படித்து வேறு பள்ளிக்கு மாறுதலாகி செல்லும் போது, அங்கு பிறப்பு சான்று கேட்கின்றனர். அப்போது பெற்றோருக்கு தேவையில்லாத சிரமம் ஏற்படுகிறது. பிறப்பு சான்று பெற தாலுகா ஆபீஸ், பத்திர பதிவு துறை, கோர்ட் ஆகியவற்றை நாட வேண்டியுள்ளது. எனவே முதல் வகுப்பிலேயே பிறப்பு சான்றுடன், 5வயது பூர்த்தி அடைந்த மாணவர்கள் சேர்க்கையை கண்காணிக்க வேண்டும் என, பெற்றோர் கோருகின்றனர்.

No comments: