Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, 7 June 2014

அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டம்: இந்த ஆண்டு ஆள்குறைப்பு இல்லை

அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில் இந்த ஆண்டு ஆள்குறைப்பு செய்யப்படாது என அந்தத் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில் நிதிப் பற்றாக்குறை காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 385 வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் பள்ளிக் கல்வித் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மொத்தம் 4 ஆயிரத்துக்கும் அதிகமான வட்டார வள மைய பயிற்றுநர்கள் இப்போது பணியாற்றுகின்றனர். இவர்கள் இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறைக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அதிகாரிகள் கூறியது:
தமிழகத்தில் வட்டார வள மைய பயிற்றுநர்களுக்கு சில மாவட்டங்களில் பற்றாக்குறை உள்ளது. சில மாவட்டங்களில் தேவைக்கும் அதிகமான வட்டார வள மைய பயிற்றுநர்கள் உள்ளனர்.
தேவைக்கும் அதிகமாக உள்ள வட்டார வள மைய பயிற்றுநர்களை மட்டும் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்த எண்ணிக்கையில் 10 சதவீதம் பேர் மட்டுமே மாவட்டத்திலிருந்து மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்படுவர். முறைப்படி கலந்தாய்வின் மூலமாக அவர்கள் இடமாற்றம் செய்யப்படுவர் என்றார் அவர்.
ரூ.3 ஆயிரம் கோடி தேவை:
தமிழகத்தில் நடப்பாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கக திட்டத்தைச் செயல்படுத்த ரூ.3 ஆயிரம் கோடி தேவை என திட்ட மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வளவு நிதி தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசு தெரிவிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மாணவர்களுக்கு செயல்வழிக் கற்றல், புதிய கற்பித்தல் முறைகளில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்குதல், பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் இடைநிற்கும் குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்தல், பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு வட்டார அளவில் 10 முதல் 15 பட்டதாரி ஆசிரியர்கள் வட்டார வள மைய பயிற்றுநர்களாகப் பணியாற்றி வருகின்றனர். அனைவருக்கும் கல்வித் திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக வட்டார வள மைய மேற்பார்வையாளர்களும் இருந்தனர்.
கடந்த ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்துக்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் 385 பேர் பள்ளிக் கல்வித் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

No comments: