Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday 19 June 2014

களை கட்டும் கலைக்கல்லூரி அட்மிஷன்!

லைக்கல்லூரிகளில் வழக்கம் போல பிகாம் படிப்பில் சேருவதற்கான மோகம் இந்த ஆண்டும் தொடர்கிறது. விஸ்காம், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற படிப்புகளில் சேருவதிலும் மாணவர்களிடம் ஆர்வம் இருக்கிறது. கணிதம், இயற்பியல் போன்ற அறிவியல் படிப்புகளிலும் ஆங்கில இலக்கியம், பொருளாதாரம் போன்ற கலைப் படிப்புகளில் சேருவதிலும் மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது. பாடப்பிரிவை விட கல்லூரிகளையே முக்கியமாகக் கருதும் போக்கு மாணவர்களிடம் உள்ளது. பிரபலமான கல்லூரிகளில் விரும்பிய படிப்புகளில் இடம் கிடைக்காவிட்டாலும்கூட, அந்தப் படிப்பில் மாலை நேரக் கல்லூரி வகுப்புகளில் இடம் கிடைக்குமா என்று பார்க்கிறார்கள். இல்லாவிட்டால், மாணவர்களின் அடுத்த விருப்பத்தில் இடம் கிடைத்தால்கூட, சேர்ந்து விடுகிறார்கள்.

அதனால், பிரபலமான முக்கியக் கல்லூரிகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றவர்களுக்கு மட்டுமே இளநிலை பட்ட வகுப்புகளில் சேர இடம் கிடைக்கிறது. கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்த நிலவரம், எந்தப் படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள சில கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தோம். சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரிக்குச் சென்றபோது, மாணவர்களின் நீண்டவரிசை நம்மை முதலில் வரவேற்றது. அங்கிருந்த மாணவர் ஒருவரிடம் விசாரித்தோம்.
என் பேரு ஸ்டீபன் சார். நான் வியாசர்பாடியிலருந்து வரேன். என்னோட பிளஸ் டூ டோட்டல் 1,049. நான் லயோலா கல்லூரியில் விஸ்காம் சேரணும்னு வந்திருக்கேன். நான் காமர்ஸ் எடுத்துப் படிச்சிருந்தாலும் என்னோட கனவு விஷுவல் மீடியா. அதனாலதான் இந்தப் படிப்பை படிக்கலாம்னு இங்க வந்திருக்கிறேன்" என்றார்.
நீண்ட வரிசையினைத் தாண்டி, லயோலா கல்லூரியின் அட்மிஷன் அதிகாரியான அருட்தந்தை ஜேக்கப்பை சந்தித்துப் பேசினோம். நம்ம லயோலா கல்லூரியைப் பொருத்தவரைக்கும் அதிக மாணவர்கள் படிக்க விரும்பும் பட்டப்படிப்பு எதுன்னு கேட்டா,  பி.காம்.ன்னு சொல்வேன். பி.காம். படிக்கறதுக்கு மொத்தம் 490 இடங்கள் மட்டுமே இருக்கு. ஆனா இந்தப் படிப்பில் சேருவதற்கு 6 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகியிருக்கு. பிளஸ் டூவில பிஸினஸ் மேத்ஸ் எடுத்துப் படிச்சவங்களுக்கு மட்டுமே இந்தப் படிப்பில் இடம் தருவோம். அடுத்ததா பாத்தீங்கன்னா பி.எஸ்சி. விஸ்காம் எனப்படும் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பிற்கு மாணவர்களிடையே அதிக வரவேற்பு இருக்கு. மொத்தம் 100 இடங்கள்தான் இருக்கு. ஆனால், இதுக்காக 3 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகியிருக்கு. இதனையடுத்து, பி.காம்., சி.ஏ. எனப்படும் பி.காம். கார்ப்பரேட் செக்கரட்டரிஷிப் படிப்புக்கு 2 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகி இருக்கு. அறிவியல் பிரிவில் பார்த்தோமென்றால் பிஎஸ்சி பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, மேத்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது." என்றார்.
பி.காம். படிப்பிற்கு ஏன் இவ்வளவு வரவேற்பு என்று கேட்டதற்கு, இங்கு வந்து படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களில் பெரும்பாலானோர் பிஸினஸில் இருப்பவர்களே. அவர்களது பிஸினஸை வழிநடத்த இந்தப் படிப்பு உதவுகிறது என்பதால் படிக்க சேருகிறார்கள். அதுமட்டுமின்றி, பி.காம். படித்தவர்களுக்கு அடுத்து சி.ஏ. படிக்கும் வாய்ப்பு, தனியார் நிறுவனங்களில் அக்கவுண்டன்ட் ஆகும் வாய்ப்பு போன்றவை அதிகமாக இருப்பதால் இந்தப் படிப்பிற்கு எப்போதுமே அதிக வரவேற்பு இருக்கிறது" என்றார் ஜேக்கப்.
என் பெயர் கிறிஸ்டினா ஸ்வீட்டி. செங்கல் பட்டிலிருந்து வந்திருக்கேன். பி.ஏ. இங்கிலீஷ் லிட்டரேச்சர் படிக்கலாம்னு இருக்கேன். இந்தக் கல்லூரியில் இங்கலீஷ் லிட்டரேச்சர் படிக்கறதுக்கு இடம் கிடைக்குமான்னுதான் தெரியல" என்றார். ஏன் என்று கேட்டதற்கு, நான் பிளஸ் டூ தேர்வில், பயோ மேத்ஸ் எடுத்துப் படித்து, 780 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருக்கிறேன். எனது மதிப்பெண்கள் எவ்வளவு வந்திருக்கிறதோ, அதற்குத் தகுந்த படிப்புகளில் எது எனக்கு நன்கு படிக்க வருமோ, அதைத்தான் தேர்வு செய்யமுடியும். அதனால்தான் நான் இங்கிலீஷ் லிட்டரேச்சர் படிப்பதற்கு விண்ணப்பித்திருக்கிறேன்" என்கிறார் தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் விண்ணப்பம் வாங்க வந்த மாணவி கிறிஸ்டீனா ஸ்வீட்டி.
சென்னை மாநிலக் கல்லூரியில் சேர அரசுப் பள்ளிகளில் படித்து முடித்த மாணவர்களே இங்கு அதிகம் பேர் விண்ணப்பிக்க வந்திருந்ததைக் காண முடிந்தது. மாநிலக் கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் பிரிவு பட்டப்படிப்புகளில் தோராயமாக ஆயிரம் இடங்கள் இருக்கும். இதற்கு, ஒவ்வொரு ஆண்டும் 12 ஆயிரங்களுக்கு மேல் விண்ணப்பங்கள் வந்து சேரும். பி.காம். கார்ப்பரேட் செகரட்டரிஷிப் (நிறும செயலியல்) படிப்பில் உள்ள 40 இடங்களுக்கு சுமார் 3,500 பேர் போட்டி போடுவார்கள். வேலைவாய்ப்பு மிகுந்த படிப்பாக மாணவர்களிடையே இந்தப் படிப்பு கருதப்படுவதால், இதற்கு அதிக வரவேற்பு இருக்கிறது.
இதனையடுத்து பி.ஏ. ஆங்கில இலக்கியப் படிப்புக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. 40 இடங்களுக்கு 1,500 பேர் போட்டி போடுவார்கள். கிராஸ் மேஜர் படித்துவிட்டு முதுகலை ஆங்கில இலக்கியம் படித்தவர்களுக்கு ஆசிரியப் பணியில் இடமில்லை என்பதால், இந்தப் படிப்புக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இதனையடுத்து பி.ஏ. எகனாமிக்ஸ், பி.ஏ. பொலிட்டிக்கல் சயின்ஸ் படிப்புகளில் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்கள் சேருகிறார்கள். பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பட்டப்படிப்புகளிலும் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்" என்கிறார் இக்கல்லூரியின் முதல்வர் இப்ராஹிம்.
மாநிலக் கல்லூரியில் உடனடி வேலைவாய்ப்பை பெற்றுத் தரக்கூடிய வேறு சில படிப்புகளும் உள்ளன. ஆனால் இதுகுறித்த விழிப்புணர்வு, மாணவர்களிடம் இல்லை என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. பி.எஸ்சி. ஜியாகிரபி, பி.எஸ்சி. ஜியாலஜி ஆகிய இரு படிப்புகளில் அறிவியல் பாடப்பிரிவு மாணவர்கள் சேரலாம். நாட்டில் எந்தெந்த இடங்களில் என்னென்ன கனிமவளங்கள் இருக்கின்றன என்று கண்டறிந்து சொல்லக்கூடியவர்கள் இந்தப் படிப்பை படித்து விட்டு வருபவர்கள்தான். இதே துறையில் முதுநிலைப் படிப்பை முடித்தவுடன் உடனடி வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. மற்றொரு படிப்பான பி.எஸ்சி. சைக்காலஜி படிப்பு குறித்தும் மாணவர்களிடம் விழிப்புணர்வு இல்லை" என்கிறார் அவர்.
எங்களது கல்லூரியில் கலை, அறிவியல் இளநிலை பட்டப்படிப்புகளில் 13 துறைகள் உள்ளன. மொத்தம் 1,100 இடங்களுக்கு மேல் இருக்கும். ஆண்டுக்கு 12 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து சேரும். எங்கள் கல்லூரியில் பி.காம். படிப்பில் சேருவதற்குதான் அதிகப் போட்டி. மொத்தமாக உள்ள 210 இடங்களுக்கு, 2,500 பேர் போட்டி போடுவார்கள். இந்தப் படிப்பிற்கு அடுத்ததாக, பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பிற்கு கிட்டத்தட்ட 1,000 மாணவிகள் போட்டி போடுவார்கள். இந்த இரண்டு படிப்புகளும் உடனடி வேலைவாய்ப்பினை பெற்றுத் தரும் படிப்புகள். இந்தக் கல்லூரியில் படிக்க வரும் மாணவிகள் சாமானியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெரும்பாலும் முதல் தலைமுறைப் பட்டதாரிகளாக இருப்பார்கள். அவர்களுக்கு உடனடி வேலை வேண்டும் என்பதால் இந்தப் படிப்புகளில் சேர அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அறிவியல் பிரிவில் பார்த்தோமென்றால் முறையே பி.எஸ்சி. பயோ கெமிஸ்ட்ரி, மேத்மேட்டிக்ஸ், கெமிஸ்ட்ரி ஆகிய படிப்புகளில் சேர ஆர்வம் இருக்கிறது" என்கிறார் பாரதி மகளிர் கல்லூரி முதல்வர் லில்லி.
காசிமேடு பகுதியில் இருந்து வருகிறேன். பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கணும். அதற்காக விண்ணப்பிக்க வந்திருக்கேன். எங்க வீட்ல நான்தான் முதல் தலைமுறை பட்டதாரி ஆகப் போகிறேன். கணினித் துறை எனக்கு மிகவும் பிடித்த துறை என்பதால் இந்த படிப்பைத் தேர்வு செய்ய இருக்கிறேன்" என்கிறார் பாரதி மகளிர் கல்லூரிக்கு வந்திருந்த மாணவி விஜயா.
திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியின் துணை முதல்வரான கோயல் ராஜிடம் பேசியபோது எங்களது கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பில் 900 இடங்கள் உள்ளன. இதில் சேர்வதற்கு ஆண்டொன்று சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துசேரும். இதில் பி.காம். படிப்பிற்குதான் அதிக விண்ணப்பங்கள் வரும். 140 இடங்களுக்கு சுமார் 1,100 பேர் விண்ணப்பிப்பார்கள். இதையடுத்து பார்த்தோமென்றால் பி.ஏ. ஆங்கில இலக்கியத்துக்கு அதிகம் பேர் விண்ணப்பிப்பார்கள். பி.எஸ்சி. ஸ்டாட்டிஸ்டிக்ஸ் என்ற படிப்பு இருக்கிறது. இப்படிப்பை முடித்தவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் ஒருசில கல்லூரிகளில் மட்டுமே இப்படிப்பு உள்ளது. இந்தப் படிப்பு குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடையே இருப்பதில்லை. அறிவியல் பிரிவைப் பொருத்தவரையில் முதலிடம் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திற்குத்தான் அதிக விண்ணப்பங்கள் வந்து சேர்கின்றன. இப்படிப்பில் உள்ள 60 இடங்களுக்கு 400 விண்ணப்பங்கள் வந்து சேர்கின்றன. இதற்கடுத்து முறையே கணிதம், இயிற்பியல் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வந்து சேர்கின்றன. ஐ.டி. துறையின் மந்த நிலை காரணமாகவும், என்ஜினீயரிங் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டு இருக்கிறது" என்றார்.
திருவண்ணாமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி முதல்வரான சுப்ரமணியனிடம் பேசினோம். எங்கள் கல்லூரியில் இளநிலைப் படிப்பில் மொத்தம் 800 இடங்கள் உள்ளன. சென்ற ஆண்டு மொத்தம் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மாணவர் சேர்க்கைக்காக வந்தன. அந்த இலக்கை, இந்த ஆண்டு தகர்த்து விட்டது. தற்போது வரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்பனையாகி விட்டன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதிக்குள் கூடுதலாக 2,000 விண்ணப்பங்கள் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கிறோம்.
பொறியியல் படிப்பு மற்றும் அது சார்ந்த வேலை வாய்ப்புகளில் ஏற்பட்ட தேக்க நிலையால், சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு, கலை அறிவியல் பாடப் பிரிவுகளில் மாணவர்களின் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. எங்களது கல்லூரியைப் பொருத்தவரை பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பிற்கு அதிக வரவேற்பு இருக்கிறது. 80 இடங்களுக்கு 600 பேர் போட்டி போடுவார்கள். இதையடுத்து பிஎஸ்சி கணிதப்படிப்பில் உள்ள  144 இடங்களுக்கு 800 பேர் போட்டி போடுவார்கள்.
80 இடங்கள் கொண்ட ஆங்கில இலக்கியப் படிப்பிற்கு 500 பேர் போட்டி போடுவார்கள். பி.காம். மற்றும் பி.பி.ஏ. படிப்புகளுக்கு தலா 400 பேர் போட்டி போடுவார்கள்" என்றார்.  எங்களது கல்லூரியில் இளநிலைப் படிப்பில் மட்டும் 934 இடங்கள் உள்ளன. சென்ற ஆண்டு  3,500 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பிக்கும் தேதி முடிவடைய இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் தற்போது 4,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்பனையாகி இருக்கின்றன.
இன்னும்  500 விண்ணப்பங்கள் கூடுதலாக விற்பனையாகலாம் என எதிர்பார்க்கிறோம். எங்கள் கல்லூரியைப் பொருத்தவரை பி.காம். படிப்பிற்கு மாணவர்களிடையே பலத்த போட்டி இருக்கும். 140 இடங்களுக்கு சுமார் 700 பேர் போட்டி போடுவார்கள். இதனையடுத்து பார்த்தோமென்றால், பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் உள்ள 80 இடங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டி போடுவார்கள். பி.ஏ. ஆங்கில இலக்கியப் படிப்பிற்கு 120 இடங்கள் உள்ளன. இப்படிப்பிற்கு 400 பேர் போட்டி போடுவார்கள். அறிவியல் பிரிவில் பி.எஸ்சி. மேத்ஸ்,  பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி ஆகிய படிப்புகளுக்கு மாணவர்களிடேயே போட்டி இருக்கும்" என்றார் திருச்சியிலுள்ள பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியின் முதல்வர் தமிழ்மணி.
எங்களது கல்லூரியில் இளநிலைப் படிப்பில் மொத்தம் 1,386 இடங்கள் இருக்கின்றன. சென்ற ஆண்டு மட்டும் தோராயமாக 9 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டு பத்தாயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகி இருக்கின்றன. இன்னும் இரண்டாயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம். கலையியல் பிரிவைப் பொருத்தவரை எங்களது கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியப் படிப்புக்கு மாணவர்களிடையே அதிக வரவேற்பு இருக்கிறது. இதனையடுத்து பி.காம். படிப்பிற்கும், பி.பி.ஏ. படிப்பிற்கும் மாணவர்களிடையே பலத்த போட்டி இருக்கும்.
அறிவியல் பிரிவைப் பொருத்தவரை பி.எஸ்சி. மேத்ஸ் பாடப்பிரிவிற்கு அதிகப் போட்டி இருக்கும். இதனையடுத்து பி.எஸ்சி. கெமிஸ்ட்ரி, ஜியாலஜி (புவி அமைப்பியல்) ஆகிய பாடங்களுக்கு மாணவர்களிடையே போட்டி அதிகம் இருக்கும்" என்கிறார் சேலம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் ஏ.ஆர். ராஜாமணி.

No comments: