தமிழகத்தில், ஏப்ரல் மாத கணக்கெடுப்பின்படி பள்ளி செல்லா குழந்தைகள் 27,400 பேர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆறு முதல் 14 வயதுடைய குழந்தைகள் 100 சதவீதம் ஆரம்பக் கல்வியை கற்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஏப்ரல் முழுவதும், அந்தந்த பள்ளி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர், பஞ்சாயத்து நிர்வாகத்தினர் இணைந்து, பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுத்து வருகின்றனர்.
கடந்த, ஏப்ரல் மாதம் தமிழகம் முழுவதும் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊரக பகுதி, 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகர்ப்புற பகுதி வார்டுகளில், 31 ஆயிரம் களப்பணியாளர்களை கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், புதிதாக 16,600 பள்ளி செல்லா குழந்தைகள், ஏற்கனவே கணக்கெடுக்கப்பட்டு பள்ளிக்கு செல்லாமல் 10,800 குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்கள், பள்ளியில் சேர நடவடிக்கை எடுத்தாலும், சம்பந்தப்பட்ட குழந்தை இடையில் பள்ளியை விட்டு செல்வதை ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணிப்பதில்லை. அந்த குழந்தையை மீண்டும் பள்ளியில் சேர்க்க மாற்று ஏற்பாடும் செய்வதில்லை. பெற்றோர் மீது குற்றச்சாட்டு கூறிவிட்டு ஆசிரியர் தப்பி விடுவதாக புகார் உள்ளது.
கல்வி அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எடுத்த கணக்கெடுப்பில் விழுப்புரத்தில் அதிகபட்சமாக 2,794, காஞ்சிபுரத்தில் 2,225, குறைந்தபட்சமாக நீலகிரியில் 153 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளன. மொத்தமாக, ஏற்கனவே பள்ளி செல்லாமல் உள்ளவர் மற்றும் புதிதாக கண்டறியப்பட்டவர் என 27,400 பள்ளி செல்லா குழந்தைகளையும், பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெற்றோர், தங்களது குழந்தைகளை பள்ளியில் தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும். ஆனால், பல காரணங்களுக்காக குழந்தைகள் இடைநிற்றல் ஏற்படுகிறது. அதை கண்காணித்து, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர், பெற்றோரிடம் பேசி, மாணவரை பள்ளிக்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
குழந்தை தொழிலாளர் நல பள்ளி, உண்டு உறைவிட பள்ளி, தனியார் காப்பகத்தில் இருந்து பள்ளிக்கு செல்லும் வசதி என, ஏதாவது ஒன்றில் அந்த மாணவரைச் சேர்க்க ஆசிரியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால், அவர்கள், மாணவர் மீது அக்கறை கொள்ளாததால், நாளுக்கு நாள் பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment