Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 5 June 2014

வணிகவியல் படிப்பின் மீது தொடரும் ஆர்வம்: அடிப்படை அறிவியல் படிப்புகளுக்கும் விண்ணப்பிப்போர் அதிகரிப்பு

கடந்த ஆண்டுகளைப் போலவே கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை 2014-15 கல்வியாண்டிலும் அதிகரித்துள்ளது.
பெரும்பாலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க செவ்வாய்க்கிழமையுடன் கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில், வழக்கம்போல் வணிகவியல் (பி.காம்) படிப்புக்கே அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கு இணையாக இளநிலை கம்ப்யூட்டர் சயின்ஸ் (பி.எஸ்சி., பி.சி.ஏ.) படிப்புகளுக்கும் விண்ணப்பித்துள்ளனர். இதுபோல் அடிப்படை அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்போரின் எண்ணிக்கை இம்முறை அதிகரித்திருப்பதாகவும் கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

இந்தப் படிப்புகளின் மீது மாணவர் ஆர்வம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, பல்வேறு கல்லூரிகளின் கோரிக்கையை ஏற்று, முக்கியப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை 10 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ள சென்னைப் பல்கலைக்கழகம் அனுமதி அளித்தது.
இந்த அனுமதியைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகள் பி.காம்., பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளில் மாணவர் சேர்க்கை இடங்களை 50-லிருந்து 70-ஆக உயர்த்திக் கொண்டன.
இந்த நிலையில் இந்தப் படிப்புகளில் சேர 2014-15 கல்வியாண்டில், கடந்த ஆண்டுகளை விட அதிகமானோர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருப்பதாக கல்லூரி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள ராணி மேரி கல்லூரியில், இம்முறை மொத்தம் 15 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் 12,700 பேர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். தபால் மூலம் 300 விண்ணப்பங்கள் வர வாய்ப்பு உள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாகும்.
மேலும் கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் வணிகவியல் படிப்புக்கே அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். காலை, மாலை இரண்டு ஷிஃப்ட்களும் சேர்த்து மொத்தம் 140 இடங்களைக் கொண்ட பி.காம். படிப்புக்கு 3 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரியில் இம்முறை 13 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு, 12,200 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில் 90 சதவீதம் பேர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 1,888 பேர் கூடுதலாக இம்முறை விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில் பி.காம்., கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களே அதிகம் என கல்லூரி முதல்வர் கே.ஆர். சீதாலட்சுமி கூறினார்.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளைப் போல் அரசு உதவி பெறும் மற்றும் பிரபல தனியார் கல்லூரிகளிலும் படிப்புகளில் சேர விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 10 முதல் 15 சதவீதமாக உயர்ந்திருப்பதாக கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இது குறித்து சென்னை அரும்பாக்கத்திலுள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி முதல்வர் நரசிம்மன் கூறியது:
கல்லூரியில் பல்வேறு படிப்புகளில் சேர இம்முறை 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மாலை நேர பிரிவில் சேர 8 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கையை விட 10 முதல் 15 சதவீதம் கூடுதலாகும்.
இதில் அதிக மாணவர்கள் சேர ஆர்வம் காட்டும் பட்டியலில் வணிகவியல் படிப்பே முதலிடத்தில் உள்ளது. கல்லூரியில் 150 இடங்களைக் கொண்ட பி.காம். படிப்பில் சேர 3,585 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். சராசரியாக ஒரு இடத்துக்கு 25 பேர் வீதம் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக கார்ப்பரேட் படிப்புக்கு மொத்தமுள்ள 70 இடங்களுக்கு 3 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இளநிலை கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு ஒரு இடத்துக்கு 10 முதல் 15 பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். பி.ஏ. பொருளாதாரம் படிப்புக்கு ஒரு இடத்துக்கு 10 பேர் வீதமும் விண்ணப்பித்துள்ளனர்.
இது போல் அடிப்படை அறிவியல் படிப்புகளான கணிதம், இயற்பியல், வேதியல் படிப்புகள் மீதும் மாணவர்களின் ஆர்வம் இம்முறை அதிகரித்துள்ளது. இந்தப் படிப்புகளில் ஒரு இடத்துக்கு 10 முதல் 12 பேர் வரை விண்ணப்பித்துள்ளனர் என்றார் நரசிம்மன்.
பொறியியல் படிப்புகள் மீது ஆர்வம் குறைவு: கலை அறிவியல் படிப்புகள் மீது ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், பொறியியல் படிப்புகள் மீதான மோகம் வெகுவாகக் குறைந்து வருகிறது.
குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ் பொறியியல் படிப்புகள் மீது மாணவர்களின் ஆர்வம் கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது.
வேலைவாய்ப்புகள் குறைந்தது, வளாகத் தேர்வுக்கு வரும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்தது என்பன உள்ளிட்ட காரணங்களால் கலந்தாய்வு மூலம் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிப்போரின் எண்ணிக்கையும் இம்முறை வெகுவாகக் குறைந்துள்ளது.
கடந்த 2013-14 கல்வியாண்டு கலந்தாய்வுக்கு 1 லட்சத்து 90 ஆயிரத்து 850 பேர் விண்ணப்பித்திருந்தனர். இம்முறை 1 லட்சத்து 73 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

No comments: