Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, 23 June 2014

மருத்துவ படிப்பு முதல்கட்ட கவுன்சலிங் முடிந்தது: 2,521 எம்பிபிஎஸ், 85 பிடிஎஸ் இடங்கள் நிரம்பின: ஜூலை 2-வது வாரத்தில் அடுத்தகட்ட கவுன்சலிங்

மருத்துவப் படிப்புக்கான முதல்கட்ட கவுன்சலிங் ஞாயிற்றுக்கிழமை முடிந்தது. இதில் 2,521 எம்பிபிஎஸ் இடங்களும் 85 பிடிஎஸ் இடங்களும் நிரம்பின. அடுத்தகட்ட கவுன்சலிங் ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது.
தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், 12 தனியார் மருத்துவக் கல்லூரிகள், சென்னையில் ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் 18 தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. திருவாரூரில் சில ஆண்டுக ளுக்கு முன்பு 100 எம்பிபிஎஸ் இடங்களுடன் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. போதுமான வசதிகள் இல்லை என கூறி, அங்கு இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) நிறுத்தி வைத்தது.
அதேபோல திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆண்டு கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட 50 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சேலம் அரசு மருத்துவக் கல்லூ ரியில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட 25 எம்பிபிஎஸ் இடங்களுக்கும் மாணவர் சேர்க்கையை மருத்துவ கவுன்சில் நிறுத்திவிட்டது.

இதுதவிர மத்திய அரசின் கல்வி நிறுவனமான கே.கே.நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மற்றும் 5 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளுக்கும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைக்கவில்லை.
இடங்கள் குறைவு
இதனால், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் 18 ஆகவும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் 7 ஆகவும் குறைந்தன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்கள் 175 குறைந்து 2,380 ஆனது. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 357 இடங்கள் போக, மாநில அரசுக்கு 2,023 இடங்கள் இருந்தன.
இதேபோல சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 இடங்கள் போக மீதமுள்ள 85 பிடிஎஸ் இடங்கள் மாநில அரசுக்கு இருந்தன.
கடந்த கல்வி ஆண்டில் 12 தனியார் மருத்துவக் கல்லூரி களில் இருந்து மாநில அரசுக்கு 900-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைத்தன. இந்த ஆண்டு 5 தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைக்காத தால், 7 தனியார் கல்லூரிகளில் இருந்து மாநில அரசுக்கு 498 இடங்களே கிடைத்தன.
இந்நிலையில், 2014-15ம் கல்வி ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க் கைக்கான கவுன்சலிங் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்து வக் கல்லூரியில் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. முதல் நாள் நடந்த சிறப்புப் பிரிவு கவுன்சலிங்கில் 44 மாணவ, மாணவிகள் அனுமதி கடிதம் பெற்றனர். இதையடுத்து 18-ம் தேதி தொடங்கிய பொதுப் பிரிவு கவுன்சலிங், ஞாயிற்றுக் கிழமை முடிவடைந்தது.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரக (டிஎம்இ) அதிகா ரிகள் கூறியதாவது: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான முதல்கட்ட கவுன்சலிங் ஞாயிற்றுக்கிழமை முடிந்தது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2,521 எம்பிபிஎஸ் இடங்கள், சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 2,606 இடங்களும் நிரப்பப்பட்டு விட்டன.
இரண்டாம் கட்ட கவுன்சலிங், ஜூலை 2-வது வாரத்தில் தொடங்க உள்ளது. 19 தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மாநில அரசுக்கு கிடைக்கும் சுமார் 950 இடங்கள், 2-ம் கட்ட கவுன்சலிங்கில் நிரப்பப்படும். திருவாரூர், திருச்சி, சேலம் அரசு மருத்துவக் கல்லூரிகள், கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் 5 தனியார் கல்லூரிகளுக்கு மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்தால் மாநில அரசுக்கு கூடுத லாக சுமார் 600 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அப்படி கிடைக்கும் இடங்களும் இரண்டாம்கட்ட கவுன்சலிங்கில் நிரப்பப்படும். இவ்வாறு தெரிவித்தனர்.
அழைப்பு கடிதம் இல்லை
இரண்டாம் கட்ட கவுன்சலிங்கில் பங்கேற்கும் தகுதியான மாணவ, மாணவிகளுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படாது. www.tnhealth.org மற்றும் www.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து விவரங்களும் வெளியிடப்படும்.

No comments: