சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக எம்பிபிஎஸ் (மருத்துவம்) மற்றும் பிடிஎஸ் (பல் மருத்துவம்) படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
வரும் 25-ஆம் தேதி ஒருநாள் மட்டும் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
தரவரிசைப் பட்டியல் வெளியீடு: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் (சுயநிதி) படிப்புகளில் சேர 7,651 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் மாணவர்கள் 3,011 பேர், மாணவிகள் 4,640 பேர் அடங்குவர். 11 மாற்றுத்திறனாளிகளும் விண்ணப்பித்துள்ளனர்.
எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் கடந்த 18-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) வெளியிடப்பட்டது.
மதுரை மாணவி முதலிடம்: தரவரிசைப் பட்டியலில் மதுரையைச் சேர்ந்த வி.பிரியதர்ஷினி 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
தஞ்சாவூரைச் சேர்ந்த நிரஞ்சனா 200-க்கு 200 மதிப்பெண்கள், திருநெல்வேலியைச் சேர்ந்த ஸ்ரீதர் சிவக்குமார் 199.75 மதிப்பெண்கள் பெற்று இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளனர்.
25-இல் கவுன்சிலிங்: வரும் 25-ஆம் தேதி பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதற்கான அழைப்புக் கடிதம் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பித்த மாணவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு கலந்தாய்வு குறித்து ஸ்பீட் போஸ்ட் மூலம் அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்படும்.
எஸ்எம்எஸ் மூலமும் தகவல் அனுப்பப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
தரவரிசைப் பட்டியல் குறித்தும், கலந்தாய்வு அழைப்புக் கடிதம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய பல்கலைக்கழக இணையதள முகவரி: www.annamalaiuniversity.ac.in
No comments:
Post a Comment