பிற மாநிலங்களில் எந்த பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக, படாதபாடுபட்டு வருகிறது. 2012ல் நடந்த முதல் தேர்வில் இருந்து தற்போது வரை குளறுபடி தொடர்கிறது.
மத்திய அரசு 2009ல் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் கொண்டு வந்த போது அதில் ஆசிரியர் தகுதி தேர்வையும் அறிமுகப்படுத்தியது. ஆரம்ப கல்வி முதல் இடைநிலைக்கல்வி வரை தரமான கல்வி வழங்க வேண்டும் எனில் தரமான ஆசிரியர் தேர்வு செய்யப்பட வேண்டியது அவசியம் என கருதி, டி.இ.டி., தேர்வை அறிமுகப்படுத்தியது. அதன்படி ஆரம்பக்கல்வி வகுப்புகளை எடுக்கும் இடைநிலை ஆசிரியரும் 10ம் வகுப்பு வரை வகுப்புகளை எடுக்கும் பட்டதாரி ஆசிரியரும், டி.இ.டி. தேர்வை எதிர்கொள்கின்றனர்.இந்த தேர்வு, பிற மாநிலங்களில் எந்த பிரச்னையும், குளறுபடியும் இல்லாமல் சுமுகமாக நடந்து வருகிறது.
*ஆந்திராவில் டி.இ.டி., தேர்வு மதிப்பெண், 'வெயிட்டேஜ்' அடிப்படையில் 20 மதிப்பெண்ணுக்கு, கணக்கிடப்படுகிறது. 80 மதிப்பெண்ணுக்கு, மற்றொரு தேர்வு நடத்தி, அதன்மூலம், தகுதியானவர்கள்ஆசிரியர் வேலைக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
*கேரளாவில், டி.இ.டி., தேர்வுக்குப்பின், நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த, இரு தேர்வுகளில், தேர்வர் பெறும் மதிப்பெண் அடிப்படையில், இறுதி பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இதேபோல், பல மாநிலங்களில், பிரச்னை இல்லாமல், டி.இ.டி., தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் மட்டும், தொடர்ந்து குளறுபடியும், குழப்பங்களுமாக இருக்கிறது.கடந்த, 2012ல் நடத்திய முதல் டி.இ.டி., தேர்வில், 2,500 பேர் தான், தேர்ச்சி பெற்றனர். காலி பணியிடங்கள் அதிகமாக இருந்ததால், தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைத்தது.காலி பணியிடங்களை நிரப்ப, அதே ஆண்டின் இறுதியில், சிறப்பு டி.இ.டி., தேர்வு நடந்தது.இதில் தேர்வு பெற்றவர்களில், 20 ஆயிரம் பேர், அதே ஆண்டு இறுதியில், பணி நியமனம் செய்யப்பட்டனர்.மூன்றாவது டி.இ.டி., தேர்வு, கடந்த, 2013, ஆகஸ்ட்டில் நடந்தது.
குளறுபடி - 1
டி.இ.டி., தேர்வில், ஆசிரியர் தேர்வு முறையை வகுக்க, பள்ளிகல்வித் துறை அமைச்சர்
தலைமையில், உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. இதில், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தலைவர், பள்ளி கல்வி இயக்குனர் மற்றும் பள்ளி கல்வித்துறை செயலர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நால்வர் குழு தான், 'வெயிட்டேஜ்' அடிப்படையில், மதிப்பெண் அளிக்கும் முறையை கொண்டு வந்தது. ஆரம்பத்திலேயே நிதானமாக ஆலோசித்து, எந்த பிரச்னையும் வராத அளவிற்கு, தேர்வு முறையை வகுத்திருக்க வேண்டும். இதை, நால்வர் குழு செய்யவில்லை.
குளறுபடி - 2
தேர்வு முறையின்படி, டி.இ.டி., தேர்வில், 150க்கு பெறும் மதிப்பெண், 60க்கும், தேர்வர்களின், பிற கல்வி தகுதியில் பெற்ற மதிப்பெண்ணுக்கு, 40 மதிப்பெண்ணுக்கும் கணக்கிடப்பட்டது. இதற்காக, 'கிரேடு' முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது தான், தேர்வர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.டி.இ.டி., தேர்வில், 150க்கு, 60 சதவீத மதிப்பெண் (90 மதிப்பெண்) பெறுபவருக்கும், 69 சதவீத மதிப்பெண் (103.5 மதிப்பெண்) பெறுபவருக்கும், 'கிரேடு' முறையில், 42 மதிப்பெண் என, தமிழக அரசு அறிவித்தது. இதுபோன்று, ஒவ்வொரு நிலையாக, 'கிரேடு' மதிப்பெண் அறிவிக்கப்பட்டு உள்ளது.மதிப்பெண், 60 சதவீதம் வாங்குபவருக்கும்,69 சதவீத மதிப்பெண் வாங்குபவருக்கும், 'கிரேடு' முறையில், ஒரே மதிப்பெண் வழங்குவது எந்த வகையில் நியாயம் என, தேர்வர்கள் கேள்வி எழுப்பினர். இதையே முன்வைத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
குளறுபடி - 3
தேர்வுகளில் கேட்கப்பட்ட, கேள்வி மற்றும் பதில்களை எதிர்த்து, பலரும், டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்கள் மீது, டி.ஆர்.பி., உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவில்லை. பாட வல்லுனர்களிடம் ஆலோசனை நடத்தி, உரிய நிவாரணத்தை அறிவித்திருந்தால், வழக்குகள் அதிகளவில் தாக்கல் ஆகியிருக்காது.
பதிவு மூப்பிற்கு மதிப்பெண் வேண்டும்
'புதிய தேர்வு முறையை, தமிழக அரசு வகுக்கும்போது, அனுபவம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பிற்கு, குறிப்பிட்ட மதிப்பெண் வழங்க, வழிவகை செய்ய வேண்டும்' என, தேர்வர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர
கோவை, கணபதி பகுதியைச் சேர்ந்த, அறிவுச்செல்வி கூறியதாவது:டி.இ.டி., தேர்வில், பல பிரச்னைகளை சந்தித்து விட்டோம். இனிமேலாவது, யாருக்கும் பாதிப்பு வராத வகையில், புதிய தேர்வு முறையை, தமிழக அரசு, உருவாக்க வேண்டும்.பல ஆண்டுகளுக்கு முன் படித்து, வேலை வாய்ப்பு அலுவலக பதிவை, விடாமல், தொடர்ந்து, புதுப்பித்து வருகிறோம்.புதிய தேர்வு முறையில், ஆசிரியர் பணி அனுபவத்திற்கும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பிற்கும், குறிப்பிட்ட மதிப்பெண் வழங்க வேண்டும்.இவ்வாறு, அறிவுச்செல்வி கூறினார்.இதே கோரிக்கையை, பல தேர்வர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கல்வியாளர், பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: டி.இ.டி., தேர்வு முறையை வகுத்த நால்வர் குழுவில், கல்வியாளர் ஒருவர் கூட இல்லை. அக்குழு உருவாக்கிய, 'கிரேடு' முறை சரியில்லை என, பலமுறை கூறி வந்தோம். தற்போது, அந்த முறையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. புதிய முறையில், ஆசிரியர் பணி அனுபவத்திற்கும், பதிவு மூப்பிற்கும், மதிப்பெண் வழங்க வேண்டும்.
அடுத்த தேர்வுஎப்போது?
ஆண்டுக்கு, இரண்டு முறை டி.இ.டி., தேர்வை நடத்த, டி.ஆர்.பி., திட்டமிட்டு இருந்தது. 2012ல், இருமுறை தேர்வுகள் நடந்தன. 2013ல், ஒருமுறை தான் தேர்வு நடந்தது.கடந்த ஆண்டுக்கான தேர்வுப் பணிகளே, இன்னும் முடியாமல் இழுத்துக் கொண்டிருக்கிறது. இதை முடித்து, இறுதி பட்டியல் வெளியிடுவதற்குள், மேலும் காலதாமதம் ஏற்படும்.வரும், மே 31ம் தேதியுடன், ஓய்வுபெறும் ஆசிரியர் பணியிடங்களுக்கு சேர்த்து தான், தற்போது, 15 ஆயிரம் ஆசிரியர் தேர்வு செய்யப்படுகின்றனர். இனி, அடுத்த ஆண்டு, மே இறுதியில் காலியாகும் இடங்களை நிரப்ப வேண்டியது இருக்கும்.இதை கருத்தில் கொண்டு, வரும், செப்டம்பர் அல்லது அக்டோபரில், அடுத்த டி.இ.டி., தேர்வு நடக்கும் என, துறை வட்டாரம் தெரிவித்தது
No comments:
Post a Comment