Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 28 May 2014

CBSE: பிளஸ் 2 தேர்வு: வரும் கல்வியாண்டில் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாக வாய்ப்பு

வரும் கல்வியாண்டில் இருந்து ஆன்-லைன் மூலம் விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளதால், சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாக வாய்ப்புள்ளதாக சி.பி.எஸ்.இ. சென்னை மண்டல அலுவலர் சுதர்சனராவ் கூறினார்.

சென்னை மற்றும் திருவனந்தபுரம் மண்டலங்களுக்கான சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (மே 26) வெளியிடப்பட்டன. சென்னை மண்டலத்தில் 46 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதில் 91.63 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் இந்தத் தேர்வை 10,755 மாணவர்கள் எழுதினர். இதில் 10,434 மாணவர்கள் (97 சதவீதம்) தேர்ச்சியடைந்தனர்.
ஐசிஎஸ் மற்றும் மாநில பாடத்திட்டங்களின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏற்கெனவே வெளிவந்த நிலையில், சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மிகவும் தாமதமாக வெளியாகின.
தமிழகத்தில் பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கி பல நாள்கள் ஆனதால் மாணவர்களும், பெற்றோர்களும் பதற்றமடைந்தனர்.
இந்த நிலையில், வரும் ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாக வாய்ப்பு உள்ளதா என சுதர்சனராவிடம் கேட்டபோது அவர் கூறியது:
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏறத்தாழ கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அதே தேதிகளிலேயே இந்த ஆண்டும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் மண்டல மையங்களில் ஸ்கேன் செய்யப்பட்டு, ஆன்-லைன் மூலம் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பப்பட்டன.
கம்ப்யூட்டர் திரையில் விடைத்தாள்களைப் பார்த்து ஆசிரியர்கள் மதிப்பீடு செய்தனர். இந்த முறையால், தவறுகள் குறைந்துள்ளதோடு, விடைத்தாள்களும் வேகமாக மதிப்பீடு செய்யப்பட்டன.
வரும் கல்வியாண்டில் (2014-15) இந்த மதிப்பீட்டு முறை பிளஸ் 2 வகுப்புக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறை அமல் செய்யப்பட்டால், பிளஸ் 2 விடைத்தாள்கள் வேகமாக மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியிடப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
எனினும், இது தொடர்பாக இறுதி முடிவை புது தில்லியிலுள்ள சி.பி.எஸ்.இ. தலைமை அலுவலகம்தான் எடுக்கும்.
மறுமதிப்பீட்டு முறை அறிமுகம்: சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில் முதல்முறையாக விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறை இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது. இதுவரை விடைத்தாள் மறுகூட்டல் மட்டுமே அமலில் இருந்தது.
விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான விவரங்கள் சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் வெளியிடப்படும். மறுமதிப்பீட்டுப் பணிகள் ஒரு மாதத்துக்குள் முடிவடையும்.
மதிப்பெண் சான்றிதழ்கள் எப்போது? பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் 2 வாரங்களுக்குள் விநியோகிக்கப்படும். வழங்கப்படும் தேதி இன்னும் முடிவுசெய்யப்படவில்லை. மாணவர்கள் தங்களது மதிப்பெண் விவரங்களை வைத்தே உயர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.

No comments: