இந்தியாவில் பதவியேற்ற நரேந்திர மோடி அரசில், மத்திய மனிதவளத் துறையின் கேபினட் அமைச்சராக ஸ்மிருதி சுபின் இரானி நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை, மே 26ம் தேதி மாலை பதவியேற்றது. புதிய அமைச்சரவையில், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. மத்திய மனிதவளத் துறைக்கு புதிய அமைச்சராக, 38 வயதே நிரம்பிய ஸ்மிருதி சுபின் இரானி என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகால மத்திய அரசில், அர்ஜுன் சிங், கபில் சிபல் மற்றும் பல்லம் ராஜு போன்ற ஆண்களே மனிதவளத்துறை கேபினட் அமைச்சர்களாக பதவி வகித்தனர். அவர்களெல்லாம் வயது முதிர்ந்தவர்கள். ஆனால், இப்போது, நாட்டின் மிக முக்கியமான துறைக்கு, 40 வயதைக்கூட தொடாத ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
இளைஞரான அவர், பல சிறப்பான திட்டங்களை துடிப்புடன் மேற்கொண்டு, இந்திய கல்வித்துறையில் பல விரும்பத்தக்க சீர்திருத்தங்களை மேற்கொள்வார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!
மத்திய மனிதவளத் துறைக்கென்று இணையமைச்சர் யாரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திறன் மேம்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை
மாணவர்கள் தொடர்பான இன்னொரு முக்கியத் துறையான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு, தனிப்பொறுப்பு அந்தஸ்துடன் கூடிய இணையமைச்சராக சர்பானந்த சோனாவால் நியமிக்கப்பட்டுள்ளார். இத்துறைக்கென்று, கேபினட் அந்தஸ்தில் அமைச்சர் நியமிக்கப்படவில்லை.
மகளிர் மற்றும் குழந்தைகள் நலன்
மகளிர் மற்றும் குழந்தைகள் நலனுக்கான கேபினட் அமைச்சராக மேனகா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதர தொடர்புடைய துறைகளின் அமைச்சர்கள்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் ஆகிய துறைகளுக்கு தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சராகவும், அணுசக்தி மற்றும் விண்வெளி துறைகளுக்கு வெறும் இணையமைச்சராகவும் ஜிதேந்திர சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக நீதி மற்றும் உரிமை வழங்கல் துறையின் கேபினட் அமைச்சராக தாவர் சந்த் கெலாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment