Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday 26 May 2014

சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ்.: கடந்த ஆண்டு கல்விக் கட்டணமே தொடருமா?

தமிழகத்தில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். இடங்களுக்கு கடந்த கல்வி ஆண்டில் (2013-14) நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணமே தொடர வேண்டும் என்பது பெற்றோர்-மாணவர்களின் விருப்பமாக உள்ளது.
குறைவான அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர இதுவரை 27,966 மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர். சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 2,172 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டு திருவண்ணாமலையில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் புதிதாக தொடங்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஏற்கெனவே செயல்பட்டு வந்த அரசு மருத்துவக் கல்லூரிகளின் கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மறு ஒப்புதலை இந்த ஆண்டு மீண்டும் இந்திய மருத்துவக் கவுன்சில் வழங்க வேண்டும். எனவே ஜூன் 18-ஆம் தேதி தொடங்கும் முதல் கட்ட எம்.பி.பி.எஸ். கலந்தாய்வின்போது மேலே குறிப்பிட்ட 2,172 எம்.பி.பி.எஸ். இடங்களும் இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கடும் கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி: இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அடிப்படையில், எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய உயிரியல்-இயற்பியல்-வேதியியல் ஆகிய பாடங்களில் ஏராளமான மாணவர்கள் அதிக மதிப்பெண்களை எடுத்துள்ளதால் கடும் கட்-ஆஃப் போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் 199.75, 199.50, 199.25,199.00,198.75, 198.50, 198.25, 198.00, 197.75, 197.50, 197.25, 197.00, 196.75, 196.50, 196.25, 196.00, 195.75, 195.50. 195.25, 195.00 ஆகியவற்றை ஏராளமான மாணவர்கள் பெற்றுள்ளனர்.
பிற்பட்ட வகுப்பினர்: ஒவ்வொரு ஆண்டும் எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் இடம்பெறும் பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களில், சுமார் 40 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக கட்-ஆஃப் மதிப்பெண்ணை எடுக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், அனைத்துப் பிரிவினருக்கு (ஓ.சி.) உரிய இடங்களில் தாங்கள் விரும்பும் அரசு மருத்துவக் கல்லூரி கிடைக்காத நிலையில், தங்களது பிரிவில் (பி.சி.) தாங்கள் விரும்பும் அரசு மருத்துவக் கல்லூரியைத் தேர்வு செய்வது வழக்கமாக உள்ளது. இதனால் கடந்த கல்வி ஆண்டில் (2013-14) பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் மதிப்பெண் 197-ஆக இருந்தது. இந்த ஆண்டு கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி காரணமாக அரசு மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ். இடத்துக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் 197.5-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சுயநிதி மருத்துவக் கல்லூரிகள்: அதிக கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைக்காத மாணவர்கள், 12 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐசி (தொழிலாளர் ஈட்டுறுதித் திட்ட நிறுவனம்) மருத்துவக் கல்லூரியின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
சுயநிதி அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்தவரை, ஏற்கெனவே பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கல்லூரியாக இருந்தால் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கான கல்விக் கட்டணம் ரூ.2.80 லட்சமாகவும், மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி போன்ற புதிய கல்லூரியாக இருந்தால் ரூ.2.30 லட்சமாகவும் நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் கட்டண நிர்ணயக் குழு கடந்த ஆண்டு நிர்ணயித்தது. சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியைப் பொருத்தவரை கடந்த ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.24,000-மாக மத்திய அரசு நிர்ணயித்தது. அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடத்துக்கு கடந்த கல்வி ஆண்டில் கல்விக் கட்டணமாக ரூ.1.15 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது.
பெற்றோர் விருப்பம்: சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ஆண்டு கல்விக் கட்டணத்தைத் தவிர பிற கட்டணங்களையும் சேர்த்து கல்லூரியைப் பொருத்து அதிகபட்சம் ஆண்டுக்கு ரூ.5.60 லட்சம் வரை செலவிட வேண்டியுள்ளதால், கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணமே இந்த ஆண்டும் தொடர தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என்பது பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments: