Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 22 May 2014

தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு ஆப்பு வைத்த உயர்நீதிமன்ற தீர்ப்பு

பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை வெளியிடவும், ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்ட பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை தனியாக வெளியிடவும் அண்ணா பல்கலைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொழில்நுட்ப கல்வி குழு: சென்னை உயர் நீதிமன்றத்தில் பூபாலசாமி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு: கடந்த 2012ம் ஆண்டு வரை தமிழகத்தில் 521 பொறியியல் கல்லூரிகள் இருந்தன. இவற்றில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் 29. பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு சட்டம் வகுத்துள்ள தரத்துக்கு இணையாக இல்லை.
ஆண்டுதோறும் 2.5 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கின்றனர். இவர்களில் 60 சதவீதம் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள்; நடுத்தர, குறைவான வருவாய் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஒவ்வொரு கல்லூரியின் நிலைமை பற்றி முழுமையாகத் தெரியாது. எனவே ஒவ்வொரு கல்லூரியையும் பற்றிய விவரங்களை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.

ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்டு பல கல்லூரிகள் இயங்குகின்றன. இதனால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. 
எனவே ஒற்றை சாளர முறையில் வரும் பொறியியல் கல்லூரிகளில், மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தையும், ஒரே மாதிரி பெயர்களைக் கொண்ட கல்லூரிகளை தனியாக அடையாளம் காணும் வகையிலும் வெளியிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இதுபோன்று மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் எஸ்.ரமேஷ், செல்வி, ஜார்ஜ், சி.வி.விஜயகுமார், அண்ணா பல்கலை சார்பில் அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, வழக்கறிஞர் வி.எஸ்.சுந்தர், அரசு தரப்பில் அரசு பிளீடர் மூர்த்தி ஆஜராகினர்.
மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) அக்னிஹோத்ரி, நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: பொறியியல் கல்லூரிகளின் கல்வி செயல்பாட்டின் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி சதவீத புள்ளி விவரங்களை 2002 முதல் 2005 வரையிலும், மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் 2008 முதல் 2010 வரையிலும் வெளியிட்டதாகவும், பொறியியல் கல்லூரிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், 2011 முதல் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அண்ணா பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கேரள உயர் நீதிமன்றம், அம்மாநிலத்தில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என பல்கலைக் கழகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. 2012ல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதேபோன்ற உத்தரவுதான் இந்த வழக்குகளிலும் தேவைப்படுகிறது என நாங்கள் கருதுகிறோம்.
மாணவர்களின் எதிர்காலம், பெரும்பாலானோர் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள், முதல் தலைமுறை பட்டதாரி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இதுபோன்ற உத்தரவு தேவைப்படுகிறது. திசை திருப்பும் வகையில் தனியார் பொறியியல் கல்லூரிகள் விளம்பரங்களை வெளியிடுவதை பொறுத்தவரை, அண்ணா பல்கலைக்கழகம் தேர்ச்சி சதவீத புள்ளிவிவரங்களை வெளியிட்ட பின் அவர்கள் விளம்பரங்களை வெளியிடலாம்.
இணையதளத்தில்...
ஏற்கனவே, 2002 - 05, 2008 - 10ம் ஆண்டுகளில் வெளியிட்டதைப் போல் உறுப்பு கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், மத்திய நிறுவனங்கள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீத புள்ளிவிவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தில் இரண்டு வாரங்களில் வெளியிட வேண்டும்.
ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்ட கல்லூரிகளின் பட்டியலை, அவற்றின் கோடு எண் உடன் தனியாக அண்ணா பல்கலை இணையதளத்தில் இரண்டு வாரங்களில் வெளியிட வேண்டும். ஒரே மாதிரியான, திசை திருப்பும் பெயர்களை பயன்படுத்தும் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக சட்டப்படி சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கையை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு எடுக்கலாம்.
பொறியியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு மற்றும் இதர வசதிகள், சட்ட விதிமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவும், அண்ணா பல்கலைக்கழகமும் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். அதன் மூலம் கல்வித் தரத்தை அந்த கல்லூரிகள் பின்பற்றுவதை உறுதி செய்ய முடியும். இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

No comments: