தமிழகத்தில் பத்ம விருது பெறுவதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில், இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் 1954 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ என மூன்று வகைகளில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாளன்று நடுவண் அரசினால் வழங்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக கலை, இலக்கியம். கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது நலன், குடிமைப் பணி, வணிக மற்றும் தொழில் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் செய்யப்பட்ட தனித்துவமான சாதனைகள் - பணிகளை அங்கீகரிப்பதற்காக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
2015-ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான தகுதியாளர்களைத் தெரிவு செய்வதற்கான விவரக் குறிப்புக்கள் உரிய படிவத்தில் கூடுதல் விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் அரசு முதன்மைச் செயலாளர், பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை - 600 009 அவர்களுக்கு 31.07.2014-க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
மேலும் இவ்விளம்பரத்தினை http://www.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் இவ்விருதிற்கென அமைக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவினரால் தெரிவு செய்யப்பட்டு நடுவண் அரசுக்குப் பரிந்துரை செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment