Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 1 May 2014

நாட்டிலேயே முதன்முறையாக தேர்வு எழுத "எக்ஸாம் பேட்' கருவி: வேளாண் பல்கலை.யில் அறிமுகம்

நாட்டிலேயே முதன்முறையாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுவதற்காக "எக்ஸாம் பேட்' என்ற நவீன உபகரணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பள்ளி, கல்லூரிகள், சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வு என எல்லாவகைத் தேர்வுகளும் காகிதத்தால் ஆன விடைத்தாளில் தான் எழுதப்பட்டு வருகின்றன. இப்போது தேர்வு முறைகளில் நவீனத் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எக்ஸாம் பேட்' என்ற தொழில்நுட்பம் மூலம் நவீன உபகரணத்தின் உதவியோடு மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுதுகின்றனர். கடந்த 2013 டிசம்பரில் நடந்த தேர்வுகள் அனைத்தும் "எக்ஸாம் பேட்' உதவியோடு எழுதப்பட்டுள்ளன.
இதன்மூலம் மாணவர்கள் தேர்வுக்கால முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும். மாணவர்கள் "எக்ஸாம் பேட்' நவீன உபகரணத்தில் கைவிரல் ரேகைகளைப் பதிவு செய்து தேர்வு எழுத முடியும். தற்போது தனியார் நிறுவனத்திடம் இருந்து உபகரணம் பெற்று தேர்வு எழுதப்படுகிறது. தேர்வு விடைத்தாள்கள் அனைத்தையும் சர்வரில் சேமித்து, ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்படுகிறது.
வருங்காலத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் தனியாக "எக்ஸாம் பேட்' பெறப்பட்டு தேர்வுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உபரகணத்தில் இணையவழி பாடத்திட்டங்களைப் படிக்கமுடியும்.
தேர்வுக்காலத்தில் மட்டும் மற்றொரு கணினிச் செயல்பாட்டில் (ஆப்ரேஷன் சிஸ்டம்) தேர்வெழுத முடியும். தேர்வு நேரத்தில் இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்படும் என்று பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments: