பல்வேறு கிராமங்களில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 5-ம் வகுப்பு முடித்த மாணவர்கள், நகர் புறத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பிற்கு இந்த மாணவர்களை நிர்வாகம் சேர்க்க மறுப்பதால் பெற்றோரும் மாணவர்களும் பெறும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் இது விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து மாணவர்கள் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கற்க நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரசு அனைவரும் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் அனைத்து கிராமங்களிலும் 1 கி.மீ. தூரத்திற்குள்ளே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கி அனைவருக்கும் தரமான கல்வியை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது இந்தப் பள்ளிகளில் 5-ம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் நகர்புறத்தில் உள்ள அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பில் படிக்க பெற்றோரும் மாணவர்களும் போய் விண்ணப்பம் கேட்டாலே நிர்வாகம் தர மறுக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இலவச மற்றும் கட்டாய கல்வி குழந்தைகளின் உரிமை என்ற சட்டத்தின் படி மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் இல்லை என்றால் கூட பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற நிலையுள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகளிலே 6-ம் வகுப்பிற்கு மாணவர்களை சேர்க்க மறுத்தால், தனியார் பள்ளிகளில் எப்படி இலவச மற்றும் கட்டாய கல்வி குழந்தைகளின் உரிமை சட்டத்தை மதித்து நடப்பார்கள். இதே நிலை தான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு முடித்து நகர்புறத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9-ம் வகுப்பிற்கு சேர்க்க முயற்சி எடுக்கும் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்டுள்ள மாணவ மாணவியரின் பெற்றோர் கூறுகையில், இப் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு அரசு ஊதியம் வழங்குகிறது. ஆனால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரோ, மாவட்டக் கல்வி அலுவலரோ கூறினால் கூட அவர்களுக்கு மதிப்பளித்து பள்ளி நிர்வாகம் இந்த மாணவர்களை சேர்ப்பது கிடையாது. தமிழ் வழிக்கே இந்த நிலை என்றால், ஆங்காங்கே இருக்கும் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் ஆங்கில வழியில் 5-ம் வகுப்பு முடித்து 6-ம் வகுப்பிற்கு இந்த அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 6-ம் வகுப்பில் சேர விண்ணப்பங்கள் கூட சாமானியர்களால் வாங்க இயலவில்லை என்று வேதனையுடன் கூறினர்.
இது குறித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத் தலைவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியருமான சு.குமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:
இலவச மற்றும் கட்டாய கல்வி குழந்தைகளின் உரிமை என்ற சட்டம் இந்தியா முழுவதும் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தவிர்த்து அனைத்துப் பகுதிகளிலும் நடைமுறைக்கு வந்தது. நாம் அனைத்து குழந்தைகளுக்கும்,பாலினம் மற்றும் சமூக வகை, வேறுபாடின்றி கல்வி அளிக்க வேண்டும். ஒரு கல்வி அவர்களை பொறுப்பான மற்றும் நல்ல குடிமக்கள் ஆக தேவையான திறமைகள், அறிவு, மதிப்பு மற்றும் மனப்போக்கு பெறுவதற்கு உதவ வேண்டும் என்ற உயரிய நோக்குடன் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சட்டம் கல்வியை 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி ஒரு அடிப்படை உரிமை என்றும், தொடக்கப் பள்ளிகளில் குறைந்தபட்ச விதிமுறைகளுக்கு வழிவகுத்தது. இது அனைத்து தனியார் பள்ளிகளும் ஏழை குடும்பங்களில் இருந்து வரும் குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்களில் முன்பதிவு செய்ய வேண்டும் (பொது தனியார் கூட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, கட்டணத்தை அரசு, பள்ளிகளுக்கு செலுத்த வேண்டும்) என்று அவசியமாக்கியது. இது நடைமுறையில் இருந்த அனைத்து அங்கீகரிக்கப்படாத பள்ளிகளுக்கு தடை, மற்றும் நன்கொடை அல்லது முதல் தொகை மற்றும் சேர்க்கைக்கு குழந்தை அல்லது பெற்றோருக்கு எந்த நேர்காணலும் வைக்க கூடாது என்று கூறுகிறது. இந்த சட்டம் குழந்தைகள் தங்களது தொடக்க கல்வி முடியும் வரை பின்தங்கவைக்கவோ, வெளியேற்றவோ அல்லது தேர்வில் கட்டாய வெற்றி பெற வேண்டும் என்றோ செய்யக்கூடாது. வெளியேறிய மாணவர்களுக்கு, சம வயது மாணவர்களை போல் திறமை பெற சிறப்பு பயிற்சிகளும் உள்ளன.
தமிழ்நாடு கட்டாய கல்வி உரிமை சட்ட விதிகள் 2011ன் படி தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள 25 சதவீத இடஒதுக்கீட்டின் படியான இடங்களை அறிவிப்புப் பலகையில் அறிவிக்க வேண்டுமெனவும் இவற்றைப் பள்ளிகல்வித் துறை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமெனவும் கூறுகிறது. பள்ளிகல்வித்துறை 25 சதவீத இடஒதுக்கீட்டின்படி பயிலும் மாணவர்களின் பட்டியலை காலந்தோறும் பராமரித்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென கோருகிறது. மேலும் மத்திய- மாநில அளவில் கண்காணிப்புக் குழுக்கள் உருவாக்கவும் இச்சட்டப் பிரிவுகள் வழிசெய்துள்ளது.
மாநில அரசின் பள்ளிக் கல்வி துறை பராமரிக்கும் பட்டியலின் படி 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு கொடுக்கப் பட வேண்டிய நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தனியார் பள்ளிகளின் வங்கிக் கணக்கில் கல்வியாண்டின் தொடக்கத்தில் ஒரு பகுதியும் ஆண்டு இறுதியில் மாணவர் வருகைப் பதிவேடு மற்றும் மதிப்பீட்டு அறிக்கையும் பள்ளிகளிடம் பெற்ற பின் பள்ளியின் வங்கிக்கணக்கில் செலுத்தப் பட வேண்டும் எனவும் 2011 தமிழ்நாடு கட்டாய கல்வி உரிமை சட்ட விதிகள் வழிகாட்டுகிறது. 2013-2014 கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் 25 சதவீத இடஒதுக்கீடு படி 3550 பள்ளிகளில் 58,619 இடங்கள் இருந்தன. இதில் 23248 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. அதாவது தகுதியுடையோரால் 60 சதவீத இடங்கள் பயன்படுத்தப்படவில்லை. அல்லது அங்கெல்லாம் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது எனவும் கொள்ளலாம். இந்த 40 சதவீத இடங்களுக்கே மத்திய-மாநில அரசுகள் நிதி ஒதுக்கவில்லை.
தனியார் பள்ளிகளுக்கே இந்தச் சட்டம் இவ்வளவு நடைமுறைகளை கூறும்போது, அரசு உதவி பெறும் பள்ளிகள் இந்தச் சட்டத்தை மதிக்காமல் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது. 6-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு பெற்றோரும் மாணவர்களும் இவ்வளவு கஷ்டங்களை சந்திக்கும் நிலையுள்ளது. அரசு இது போன்ற மாணவர்களை சேர்க்க மறுக்கும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து பள்ளிக்கான மானியத்தை நிறுத்தி வைத்தல், அங்கீகாரத்தை ரத்து செய்தல் போன்ற தீவிர நடவடிக்கைகளை எடுத்து மாணவர்கள் நலன் காக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment