அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்து வழிகாட்டும் வகையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவில் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, சாந்தோம் மேல்நிலைப் பள்ளி, சூளைமேடு ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை நடந்தது.
அசோக் நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி பயிற்சி முகாமை பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தொடங்கிவைத்தார். சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி வி.ராஜேந்திரன் வரவேற்று அறிமுகவுரை ஆற்றினார்.
மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகள், ராணுவம், தகவல் தொழில்நுட்பத் துறை வேலைவாய்ப்புகள் குறித்து மேற்கண்ட அனைத்து பள்ளிகளிலும் நிபுணர்கள் உரையாற்றினர். உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் தொடர்பாக பிளஸ் 2 மாணவ, மாணவிகள் கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். இந்த முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றதாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி வி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment