Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 23 May 2014

ரூ.260 கோடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை, காலணிகள்

தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் ரூ.260 கோடியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை, காலணிகள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட உள்ளன.
இந்தப் பொருள்களுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. வரும் ஜூலை மாதத்துக்குள் அனைத்து மாணவர்களுக்கும் இந்தப் பொருள்களை விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக லேப்-டாப், புத்தகப் பை, காலணிகள் உள்ளிட்ட பொருள்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்தப் பொருள்கள் பல்வேறு அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகளின் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வந்தன.
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்துப் பொருள்களையும் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் கொள்முதல் செய்து விநியோகம் செய்யும் என அறிவிக்கப்பட்டது. அந்த கழகத்தின் பெயரும் தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் என மாற்றப்பட்டது.
இந்த ஆண்டு இலவசப் பொருள்களைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை இந்தக் கழகம் தொடங்கியுள்ளது.
இந்தப் பணிகள் தொடர்பாக அதிகாரிகள் கூறியது:
தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் இந்த ஆண்டு புத்தகப் பை, காலணிகள், வரைபடங்கள், அட்லஸ் புத்தகங்கள், கணித உபகரணப் பெட்டிகள், கலர் பென்சில்கள் உள்ளிட்ட பொருள்கள் ரூ.260 கோடியில் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
இதில் புத்தகப் பை மற்றும் காலணிகள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கு மட்டும் ரூ.200 கோடிக்கு மேல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பொருள்களை மாணவர்களுக்கு ஜூலை மாதத்துக்குள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இலவச சைக்கிள், லேப்-டாப் உள்ளிட்ட பொருள்களை கடந்த ஆண்டுகளில் கொள்முதல் செய்த நிறுவனங்களே இந்த ஆண்டும் கொள்முதல் செய்யும் என அவர்கள் தெரிவித்தனர்.
அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும்...
காலணிகள் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்கப்படுகிறது. ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கணித உபகரணப் பெட்டி வழங்கப்படுகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கலர் பென்சில்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

No comments: