உலக ஆமைகள் தினம் வெள்ளிக்கிழமை (மே 23) அனுசரிக்கப்படுகிறது. அரிய வகை விலங்கினங்களில் ஒன்றான ஆமைகள், மீன்பிடி வலைகளில் சிக்கி உயிரிழப்பதைத் தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆமைகள் தினத்தையொட்டி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை உள்பட தென்னிந்தியக் கடற்கரை பகுதிகளில் கடந்த சில மாதங்களில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியக் கடற்கரைகளில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் ஆமைகள் ஆலிவ் ரிட்லி என்ற வகையைச் சார்ந்தவை. இந்த ஆமைகளுக்கு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இனப்பெருக்க காலம் ஆகும்.
முட்டையிடுவதற்காக கடற்கரைக்கு வரும் பெரும்பாலான ஆமைகள் மீன்பிடி விசை படகுகளில் பயன்படுத்தப்படும் வலைகளில் சிக்கி இறக்கின்றன. இந்த ஆண்டு இனப்பெருக்க காலத்தில் தமிழகத்தில் 800-க்கும் அதிகமான ஆமைகளும், ஆந்திரத்தில் 1011 ஆமைகளும் மீன்பிடி வலைகளில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து கடல் ஆமைகள் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த அகிலா கூறியதாவது:
ஆலிவ் ரிட்லி ஆமைகள், ஒடிஸா உள்ளிட்ட இந்தியக் கடல்பகுதிகளில் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்கின்றன.
மீனவர்களின் நண்பன்: ஆலிவ் ரிட்லி ஆமைகளின் முக்கிய உணவு ஜெல்லி மீன்களாகும். ஜெல்லி மீன்கள் இருக்கும் இடத்தில் மற்ற மீன்களின் உற்பத்தி இருக்காது. மீன்வளத்தைப் பெரிதும் பாதிக்கும் ஜெல்லி மீன்களை அழிப்பதில் கடல் ஆமைகள் பெரும்பங்கு வகிக்கின்றன.
அரிய வகை உயிரினம்: இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன் படி ஆலிவ் ரிட்லி ஆமைகள் அழிந்து வரும் அரிய வகை உயிரினங்களின் பட்டியலில் உள்ளது. இவை மீன்பிடி வலைகளில் சிக்கும்போது அவற்றை விடுவிக்காமல், வலையை மட்டும் அறுத்து விடுவதால்தான் பெரும்பாலான ஆமைகள் இறப்பதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தவிர்க்க மீன்வளத் துறை மற்றும் வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
50 ஆயிரம் ஆமைக் குஞ்சுகள்: இந்த ஆண்டு சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள கடல் பகுதியில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. அதில் தன்னார்வ அமைப்புகளின் சார்பில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான முட்டைகள் பாதுகாத்து வைக்கப்பட்டு, அவை குஞ்சு பொறித்த பின் கடலில் விடப்பட்டன.
பெசன்ட் நகர் கடற்கரை பகுதிகளில் வனத்துறை சார்பில் 85 இடங்களில் 9 ஆயிரத்து 700 ஆலிவ் ரிட்லி முட்டைகள் பாதுகாக்கப்பட்டு வந்தன.
அவற்றில் இதுவரை 8834 முட்டைகளில் இருந்து வெளிவந்த குஞ்சுகள் கடலுக்குள் விடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment