பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி 79,953 மாணவர்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். மறுகூட்டல் கோரி 3,346 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டு விடைத்தாள் நகல் கோரி 84 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு 4 ஆயிரம் பேர் குறைவாக விண்ணப்பித்துள்ளனர்.
விடைத்தாள் நகல் கோரியுள்ள மாணவர்கள் அனைவருக்கும் ஜூன் 2-ஆம் தேதிக்குள் விடைத்தாள் நகல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் ஆகியவை ஜூன் 10 அல்லது 12-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் கூறினார்.
மறுகூட்டல், மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் புதிய மதிப்பெண் விவரம் அடங்கிய சி.டி.க்கள் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு, மருத்துவக் கல்வி தேர்வுக் குழுக்களிடம் வழங்கப்படும். இந்த புதிய மதிப்பெண் அடிப்படையிலேயே ரேங்க் லிஸ்ட் வெளியிடப்பட்டு, மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகள் வெளியான வெள்ளிக்கிழமை முதல் புதன்கிழமை (மே 14) வரை விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, புதன்கிழமை மாலை வரை 79,953 மாணவர்கள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களின் விடைத்தாள்கள் அந்தந்த விடைத்தாள் திருத்தும் முகாம்களிலிருந்து சென்னைக்கு எடுத்துவரப்பட்டு ஸ்கேன் செய்யப்படும். இதற்காக, சென்னையில் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் தலைமையில் விடைத்தாள் மறுமதிப்பீட்டு முகாம் அமைக்கப்படும். இந்த முகாம் அமைக்கும் பணிகள் ஓரிரு நாளில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முகாமில் ஸ்கேன் செய்யப்படும் விடைத்தாள் நகல்கள் படிப்படியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
விடைத்தாள் நகலைப் பதிவிறக்கம் செய்த மாணவர்களுக்கு விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க 3 நாள்கள் அவகாசம் வழங்கப்படும். விடைத்தாள் மறுமதிப்பீட்டில் மொத்த விடைத்தாளையும் மூன்று மூத்த ஆசிரியர்கள் கொண்ட குழு மறுமதிப்பீடு செய்யும்.
இந்தக் குழுவுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட மதிப்பெண்ணை குறைக்கவோ, அதிகரித்து வழங்கவோ அதிகாரம் உண்டு. எனவே, மாணவர்கள் தங்களது பாட ஆசிரியர்களுடன் ஆலோசித்த பிறகே மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஏதேனும் ஒரு கேள்விக்கு மதிப்பெண் அதிகரிப்பதை மட்டும் மனதில் வைத்து மறுமதிப்பீடு கோரக் கூடாது. மற்ற கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் சரியாக உள்ளதா, அவற்றுக்கான மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். மதிப்பெண் அதிகரிக்க வாய்ப்பிருந்தால் மட்டுமே மறுமதிப்பீடு கோர வேண்டும்.
மறுமதிப்பீட்டில் மதிப்பெண்ணில் மாறுதல் இருக்கும் மாணவர்களுக்கு புதிதாக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மறுகூட்டலின்போது மதிப்பெண் அதிகரித்தால் மட்டுமே புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். மதிப்பெண் குறைந்தால், அவர்களுக்கு பழைய மதிப்பெண்ணே வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment