சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வில் தமிழகத்தில் 99.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை மண்டல அளவில் 99.68 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலர் டி.சுதர்சன ராவ் கூறினார்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளங்களில் திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்டன. இது குறித்து டி.சுதர்சன ராவ் கூறியது:
சென்னை மண்டல தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறிதளவு அதிகரித்துள்ளது. மொத்தம் தேர்வு எழுதிய 1 லட்சத்து 23 ஆயிரத்து 279 பேரில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 572 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 257 பேர் மட்டும் தேர்ச்சி பெறவில்லை. இவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு ஜூன் இறுதியில் அல்லது ஜூலை மாதத்தில் நடைபெறும். தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வை பள்ளிகள் அளவில் 4,996 பேரும், சி.பி.எஸ்.இ. வாரியத்தில் 23,593 பேரும் எழுதினர். இதில் 17 பேர் மட்டுமே தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம் 99.94 ஆகும்.
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு டிஜிட்டல்மயமாக்கப்பட்டது. அதன்படி, அனைத்து விடைத்தாள்களும் அந்தந்த மண்டல மையங்களுக்கு எடுத்துவரப்பட்டு, ஸ்கேன் செய்யப்பட்டன. ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள் விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ஆசிரியர்கள் கம்ப்யூட்டரில் விடைத்தாள் பக்கங்களைப் பார்த்து மதிப்பீடு செய்தனர். இதன் மூலம் விடைத்தாள் மதிப்பீட்டில் தவறுகள் குறைந்துள்ளன. சோதனை அடிப்படையில், தில்லி மண்டலத்தில் மட்டும் பிளஸ் 2 தேர்வில் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் இந்த முறை பிளஸ் 2 தேர்விலும் அறிமுகம் செய்யப்படும்.
சென்னை மண்டலத்தில் இடம்பெற்றிருந்த கேரள மாநிலம் இந்த ஆண்டு தனியாக பிரிக்கப்பட்டு திருவனந்தபுரம் மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது.
மே 28-க்குள் சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 28-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என டி.சுதர்சன ராவ் கூறினார்.
தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வை 10 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் நடைபெற்று வருகிறது. மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியிடப்பட்டன.
சி.பி.எஸ்.இ. இயக்குநரிடமிருந்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தொடர்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் வரும் 28-ஆம் தேதிக்குள் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியான ஓரிரு வாரங்களில் மதிப்பெண் சான்றிதழும் வழங்கப்படும் என்றார் அவர்.
சென்னை மண்டலத்துக்கு இரண்டாவது இடம்
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள திருவனந்தபுரம் மண்டலம் 99.96 சதவீதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது.
சென்னை மண்டலம் 99.68 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தையும், தில்லி மண்டலம் 98.31 சதவீத தேர்ச்சியுடன் 9-ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
சராசரி தேர்ச்சி விகிதம் 98.87
மண்டல வாரியாக தேர்ச்சி சதவீதம்:
திருவனந்தபுரம் - 99.96
சென்னை - 99.68
பாட்னா - 99.51
பஞ்சகுலா - 99.43
ஆஜ்மீர் - 99.40
புவனேசுவரம் - 99.31
அலகாபாத் - 99.31
டேராடூன் - 99.07
தில்லி - 98.31
குவாஹாட்டி - 92.67
No comments:
Post a Comment