தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், திங்கள்கிழமை நடத்தப்பட்ட குரூப் 2 மூன்றாம் கட்ட கலந்தாய்வில் 101 பேர் பங்கேற்கவில்லை. 96 பேர் மட்டுமே பங்கேற்றனர். முக்கியமான பணியிடங்கள் காலியாக இல்லாத காரணத்தால் அவர்கள் இந்தக் கலந்தாய்வை புறக்கணித்ததாக தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சார்பதிவாளர், நகராட்சி ஆணையாளர், உதவி பிரிவு அலுவலர் உள்ளிட்ட குரூப் 2 தொகுதிக்கு உள்பட்ட 3 ஆயிரத்து 631 காலிப் பணியிடங்களுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. நேர்முகத் தேர்வு அல்லாத 1,262 பணியிடங்களில் பணியாளர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு ஏற்கெனவே இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த நிலையில், மூன்றாம் கட்ட கலந்தாய்வு சென்னை பிராட்வேயில் உள்ள அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் திங்கள்கிழமை (ஏப். 28) காலை தொடங்கியது. இந்த கலந்தாய்வில் 170 காலியிடங்களுக்காக 197 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இதில் 96 பேர் மட்டுமே பங்கேற்றனர். இதனால், 74 பணியிடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறியது:
கடந்த 2012-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், நேர்முகத் தேர்வு இல்லாத குருப்-2 தேர்வு நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற தேர்வாளர்கள் 941 பேர் கடந்த இரண்டு கலந்தாய்வுகள் மூலம் நிரப்பப்பட்டனர். இதில் மீதமுள்ள 321 பணியிடங்களில், இடஒதுக்கீடு அடிப்படையின் கீழ் 170 காலிப் பணியிடங்களுக்கு 197 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். ஆனால், 96 பேர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்றனர்.
இது போன்று கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் தேர்வாளர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்காமல் தவிர்த்து வருகின்றனர். இதில் நிரப்பப்படாத 74 காலி பணியிடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும்.
அதே போன்று, இந்தத் தேர்வில் காலியாக உள்ள மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளுக்கான 151 காலிப் பணியிடங்கள் விரைவில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்றார் நவநீத கிருஷ்ணன்.
No comments:
Post a Comment