சென்னை உள்பட தமிழகத்தில் நடைபெறும் கோடை கால பயிற்சி முகாம்களுக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், பல்நோக்கு நேரு உள்விளையாட்டு அரங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம், நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கம், நேரு பூங்கா விளையாட்டு வளாகம், அசோக் நகர் புதூர் கிரிக்கெட் அகாதெமி மற்றும் வேளச்சேரி நீச்சல் குள வளாகம் ஆகிய நவீன விளையாட்டு அரங்குகளில் ஆண்டுதோறும் கோடை கால பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இந்த விளையாட்டு அரங்குகளில் ஏப்ரல் 25 முதல் மே 9-ஆம் தேதி வரையிலும், மே 12 முதல் மே 26-ஆம் தேதி வரை என இரண்டு கட்டங்களாக பயிற்சி முகாம்கள் நடைபெறும். தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச் சண்டை, கிரிக்கெட், வாள்சண்டை, கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, ஹாக்கி, ஜுடோ, கோ-கோ, கபடி, டென்னிஸ், டேக்வோண்டோ மற்றும் மேசைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் 15 நாள்களுக்கு சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும். மேலும் அண்ணா நீச்சல் குளம், அண்ணா சதுக்கம், மெரீனா கடற்கரை, செனாய்நகர் நீச்சல் குளம், வேளச்சேரி நீச்சல் குள வளாகம் ஆகிய மூன்று நீச்சல் குளங்களிலும் நீச்சல் பழகும் திட்டத்தில் நீச்சல் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி மாணவர்கள் விளையாட்டு அரங்குகளின் அதிகாரிகள் அல்லது சம்பந்தப்பட்ட பயிற்றுநர்களை காலை, மாலை நேரங்களில் அணுகி விவரங்களை பெறலாம்.
மாவட்ட அளவில்... இதுபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் கோடை கால பயிற்சிகளுக்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமே பெற்று, பூர்த்தி செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment