Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 29 April 2014

வேலை வாய்ப்புக்காக புதிய இணையதளம்: விரைவில் துவக்க ஏற்பாடு

தொழில் பயிற்சி பெற்ற மற்றும் பயிற்சி பெறாத இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக தமிழக அரசு சார்பில் புதிய இணையதளம் துவங்கப்படுகிறது. இணைய தளத்தை வடிவமைத்து பராமரிக்கும் பணிக்காக "எல்காட்" நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது.

இளைஞர்களுக்கு பயிற்சி
பெருகி வரும் தனியார் தொழில் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் தொழிலாளர்களை அளிப்பதற்காக 18 வகையான தொழில்களில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை 2013 - 14ல் தமிழக அரசு அறிவித்தது. ஓராண்டில் 2.14 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக, தமிழக திறன் மேம்பாட்டு கழகத்தை தமிழக அரசு துவங்கியது.
இந்நிறுவனம் மூலம் பயிற்சி பெற்றவர்களோடு தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,)பயிற்சி சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களையும் இணைத்து தமிழகத்தை வேலைவாய்ப்பு கேந்திரமாக உருவாக்க திட்டம் வகுக்கப்பட்டது.
"ஸ்மார்ட் கார்டு"
இத்திட்டத்தின் முதல்கட்டமாக ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு" வழங்கப்படுகிறது. இதில், மாணவரின் பெயர், வயது, கல்வித் தகுதி, எந்த பிரிவில் பயிற்சி பெற்றவர், கணினி கையாளுதல் உள்ளிட்ட கூடுதல் தகுதிகள் குறித்த தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.
ஸ்மார்ட் கார்டில் உள்ள விவரங்களைக் கொண்டு தனி பதிவேட்டை மாநிலம் தழுவிய அளவில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், ஸ்மார்ட் கார்டு மற்றும் பதிவேடு விவரங்களை உள்ளடக்கி தமிழக வேலைவாய்ப்பு இணைய தளத்தை துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேலை வாய்ப்பு துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் தனியார் துறையின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வெளிமாநில மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் பெருகி வருவதால் அவர்களின் தேவைக்கு ஏற்ப தொழிலாளர்களை அளிக்க வேண்டிய கடமை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. புதிய முதலீடுகள் மூலம் புதிய, புதிய தொழில்கள் துவங்கப்படுகினறன. அதற்கேற்றவாறு, பயிற்சி பெற்ற மற்றும் பயிற்சி பெறாத தொழிலாளர்களை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
ஒருங்கிணைப்பு நடவடிக்கையில் ஒரு பகுதியாக வேலைவாய்ப்பு இணையதளத்தை தமிழக அரசு துவங்குகிறது. இந்த இணைய தளத்தில் ஒவ்வொரு துறை வாரியாக பயிற்சி பெற்ற மற்றும் பயிற்சி பெறாத தொழிலாளர்களின் முழு விவரங்கள் இடம் பெற்று இருக்கும். இந்த இணையதளம் மூலம் தங்களுக்கு தேவையான தொழிலாளர்களை தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யலாம்.
"டெண்டர்"
வேலைவாய்ப்பு இணையதளம் வேலை தேடுவோருக்கும் வேலை அளிப்பவர்களுக்கும் பாலமாக இருக்கும். இணையதளத்தை உருவாக்க "எல்காட்" மூலம் டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் இணையதளம் வடிவமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments: