பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு மே 9 முதல் 14 வரை மாணவர்கள் தங்களது பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய எந்தவொரு பாடத்துக்கும் விடைத்தாளின் நகல் கோரியோ, மறுகூட்டல் கோரியோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர் மே 9 முதல் மே 14 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தங்களது தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதே பாடத்துக்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கும் அப்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படும்.
விடைத்தாள் நகலைப் பெற மொழிப்பாடங்கள் மற்றும் ஆங்கில விடைத்தாள்களுக்கு தலா ரூ.550-ம், ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.275-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
மறுகூட்டலுக்கு மொழிப்பாடங்கள், ஆங்கிலம் மற்றும் உயிரியல் பாடத்துக்கு தலா ரூ.305-ம், ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.205-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதற்கான கட்டணத்தை விண்ணப்பிக்கும் பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச்சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அதன்மூலமே மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகலை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ளவும் இயலும்.
விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யும் தேதி, இணையதள முகவரி பின்னர் அறிவிக்கப்படும் என தேவராஜன் அறிவித்துள்ளார். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment