Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday 17 March 2014

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேராசிரியர் பணி நியமனம்?

தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் நிலையில், பேராசிரியர் பணி நியமனத்துக்கான நேர்முகத் தேர்வை நடத்த அரசு உதவிபெறும் கல்லூரிகள் திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி நியமனத்துக்கான நேர்முகத் தேர்வை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தியிருக்கும் நிலையில், அரசு உதவியைப் பெற்றுவரும் இந்தக் கல்லூரிகள் மட்டும், பணி நியமனத்துக்கான நேர்முகத் தேர்வை எப்படி நடத்த முடியும் என்று பேராசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சென்னை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 80-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜனவரி மாதம் விளம்பரம் வெளியிடப்பட்டு, ஜனவரி 31-ம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
முதல்கட்ட நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த பிப்ரவரி 26-ம் தேதி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆட்சிமன்றக் குழுவில் ஒப்புதல் பெறப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இரண்டாம் கட்டமாக கடந்த 10-ம் தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, நேர்முகத் தேர்வை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடத்தப்பட இருந்த நேர்முகத் தேர்வுகளையும், பல்கலைக்கழகம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த பச்சையப்பா அறக்கட்டளை அதன் கீழ் இயங்கி வரும் அரசு உதவி பெறும் கல்லூரிகளான சென்னை பச்சையப்பா கல்லூரி, கந்தசாமி நாயுடு கல்லூரி, செல்லம்மாள் பெண்கள் கல்லூரி, காஞ்சிபுரத்திலுள்ள பச்சையப்பா ஆண்கள் கல்லூரி மற்றும் பெண்கள் கல்லூரி, கடலூர் சி.கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணியிடங்கள் 123-க்கும், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 34-க்கும் வரும் 26, 27, 28 தேதிகளில் நேர்முகத் தேர்வை நடத்தவுள்ளது.
இதற்காக விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன.
இதற்கு கல்வியாளர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறை என்பது அரசு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமல்ல, அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.
ஏனெனில், இங்குள்ள ஆசிரியர்களுக்கும் அரசுதான் ஊதியம் அளிக்கிறது. அவர்களும் அரசு ஊழியர்கள்தான். நிர்வாகப் பணியிடங்களுக்கு மட்டும்தான் அறக்கட்டளை சார்பில் ஊதியம் அளிக்கப்படும்.
எனவே, சென்னை பல்கலைக்கழகம் ஒத்திவைத்ததுபோல், பச்சையப்பா அறக்கட்டளை நிர்வாகமும் பேராசிரியர் பணி நியமன நேர்முகத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து பச்சையப்பா அறக்கட்டளை தலைவர் ஜெயச்சந்திரன் கூறியதாவது:
பச்சையப்பா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு சட்டப்படியே நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது.
சென்னை பல்கலைக்கழகம் அரசு பல்கலைக்கழகம். தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்பது அரசு மற்றும் பொதுத்துறை கல்வி நிறுவனங்களுக்கு மட்டும்தான் பொருந்தும்.
எங்களுடைய கல்லூரிகள் அரசு உதவிகளை பெற்று வருகின்றன என்றபோதும், அறக்கட்டளையின் கீழ் இயங்கி வருபவை.
இருந்தபோதும், காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வை நடத்திக் கொள்வதற்கு தேர்தல் ஆணையத்திடம் தடையில்லாச் சான்றுக்கு விண்ணப்பித்துள்ளோம். ஓரிரு நாள்களில் அது கிடைத்துவிடும் என நம்புகிறோம்.
எனவே, திட்டமிட்டபடி நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்றார்.

No comments: