பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் அதிக மாணவர்கள் தோல்விக்கு காரணம் தமிழாசிரியர்கள் தான் என அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் தாய் மொழியான தமிழ் மொழிப்பாடத்தில் அதிகமான மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தனர். இதனால் கல்வித்துறை அதிகாரிகள் தமிழாசிரியர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். பல மாவட்டங்களில் கல்வி அதிகாரிகள் அந்தந்தப்பள்ளிகளில் உள்ள தமிழாசிரியர்கள், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும், என உத்தரவிட்டுள்ளனர்.
வினாத்தாள் வடிவமைப்பு
பத்தாம் வகுப்பில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்ட பின்பு வினாத்தாள் வடிவமைப்பு கடினமாக உள்ளது. குறிப்பாக முதல் தாளில் நெடுவினாக்கள் 47வது வினா செய்யுள் பகுதியிலும், 48வது வினா உரைநடைப்பகுதியிலும் கேட்கப்படும். இந்த இரு வினாக்களுக்கும் தலா எட்டு மதிப்பெண் வழங்கப்படும். ஒவ்வொரு வினா பகுதியிலும் நான்கு வினாக்கள் கொடுக்கப்பட்டு ஒரு வினாவிற்கு பதில் எழுத வேண்டும். தற்போது இதில் இரு வினாக்கள் மட்டுமே கொடுக்கப்பட்டு இதில் ஒன்றுக்கு பதில் எழுத வேண்டும்.
இரண்டாம் தாளில் 41 வினாவில் பொது கட்டுரை கேட்கப்படும். இதில் நான்கு தலைப்புகள் கொடுக்கப்பட்டு ஒன்று மட்டும் எழுத வேண்டும். தற்போது இரு தலைப்புகள் கொடுக்கப்பட்டு ஒரு கட்டுரை எழுத வேண்டும். இது நன்கு படித்த மாணவர்கள் கூட எழுத முடியாமல் விட்டு விடுகின்றனர். இதனால் தமிழ்ப் பாடத்தில் தோல்வி அதிகம் ஏற்படுகிறது. பழைய முறைப்படி ஒரு வினாவிற்கு நான்கு தேர்வுகள் கொடுக்கப்பட வேண்டும்.
தமிழக தமிழாசிரியர்கள் கழக மாநில துணைச் செயலாளர் இளங்கோ கூறியதாவது: சமச்சீர் பாடத்திட்டத்தில் கேள்வவித்தாள் கடினமாக உள்ளது. நெடு வினாக்களுக்கு நன்கு படித்த மாணவர்கள் கூட பதில் அளிக்க முடிவதில்லை. இது தான் தமிழில் மாணவர்கள் தோல்விக்கு காரணம், வினாத்தாள் வடிவமைப்பை மாற்ற வேண்டும். இதை விட்டுவிட்டு தமிழாசிரியர்களுக்கு நெருக்கடி தரக்கூடாது. அறிவியல் பாடத்தில் முன்பு அதிக தோல்வி இருக்கும். செய்முறை தேர்வுக்கு 25 மதிப்பெண் வழங்கியதால் தோல்வி குறைந்துள்ளது. இது போன்று தமிழ் வினாத்தாளிலும் மாற்றம் செய்ய வேண்டும், என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment