Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 13 March 2014

தனியார் கல்லூரி செவிலியர்களுக்கும் அரசுப் பணி வழங்கும் அரசாணை செல்லும்: உறுதி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தனியார் செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்களுக்கும் அரசுப் பணி வழங்கும் தமிழக அரசின் ஆணை செல்லும் என்று உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், தமிழக அரசு ஆணை செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் நீதிமன்றம் புதன்கிழமை (மார்ச் 12) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்களை அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணிக்கு பரிசீலிக்கலாம் என கடந்த 2012-ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, அரசு செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்கள் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என்று உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் தனியார் செவிலியர் கல்லூரி மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர், அரசு பிறப்பித்த ஆணை செல்லும் என்றும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கருப்பசாமி மற்றும் சிலர் மனுத் தாக்கல் செய்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
அரசு செவிலியர் கல்லூரியில் படித்த 1,861 பேர், அரசு மருத்துவமனையில் செவிலியர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் இரண்டு கட்டமாக நடைபெற்றன.
முதல்கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் கலந்துக் கொண்ட 969 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மீதமுள்ள 892 பேருக்கு பணி நியமன உத்தரவு பிறப்பிக்கும் நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
அதனால் 892 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்களையும், அரசு மருத்துவமனை செவிலியர் பணிக்கு தகுதித் தேர்வு நடத்தி தேர்வு செய்யலாம் என்று கடந்த 2012-ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதனால், அந்த 892 பேருக்கு பணி கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, அரசு பிறப்பித்த இந்த அரசாணை செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மறு ஆய்வு மனு, நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு அரசுப் பணிக்காக, ஒருவரின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டதைக் காரணமாகக் கூறி, அந்த நபர் பணி நியமன உரிமை கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி, மனுதாரர் பணி நியமனம் கோருவதை சட்ட உரிமையாகக் கோர முடியாது. எனவே, இந்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்கிறோம் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இந்த மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் கடந்த 7-ஆம் தேதி ஒத்தி வைத்தபோது, செவிலியர் மாணவிகள் சிலர் உயர் நீதிமன்றக் கட்டடத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

No comments: