டி.இ.டி., தேர்வில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டுள்ளதால், தோல்வி அடைந்தவர்களில் 30 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெறுவர் என டி.ஆர்.பி., வட்டாரம் நேற்று மாலை தெரிவித்தது. இதனால், தேர்வர்கள், குதூகலம் அடைந்துள்ளனர்.
டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற, 55 சதவீதம் பெற வேண்டும் எனில், 82.5 மதிப்பெண் (150க்கு) வருகிறது. இது, 83 மதிப்பெண்ணாக, கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே 83ல் இருந்து 89 மதிப்பெண் வரை பெற்று தோல்வி அடைந்தவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர்.
கடந்த ஆகஸ்ட்டில் நடந்த தேர்வில், 27 ஆயிரம் பேர் தான், தேர்ச்சி பெற்றனர். தற்போது, அதைவிட, தேர்ச்சி எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல், இன்று, டி.ஆர்.பி., இணையதளத்தில் (http://trb.tn.nic.in/) வெளியாகலாம்.
ஏற்கனவே, தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு விட்டது. இப்போது, கூடுதலாக தேர்ச்சி பெறுவர்களுக்கும், விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். கடந்த, 2012 தேர்வில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவில் அதிக தேர்வர்கள், தேர்ச்சி பெறாததால், அவர்கள் பிரிவில், 400 இடங்கள் நிரப்பப்படவில்லை. கடந்த தேர்வில், அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். தற்போது, 5 சதவீத சலுகை அளிக்கப்பட்டிருப்பதால், இட ஒதுக்கீடு பிரிவினரின் தேர்ச்சி சதவீதம், கணிசமாக உயரும்.