பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை முழுமையான அரசுக் கல்லூரிகளாக மாற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக பொதுச் செயலாளர் பிரதாபன் வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக தமிழக அரசு ரூ. 573 கோடி நிதி ஒதுக்கியிருப்பது பாராட்டுக்குரிய விஷயம். பெருமளவில் தமிழக அரசின் நிதி உதவி பெற்று பல்கலைக்கழகங்களால் நிர்வகிக்கப்படும் இந்த உறுப்புக் கல்லூரிகளில், தனியார் சுயநிதி கல்லூரிகளில் வசூலிக்கப்படுவதுபோன்ற அதிக கல்விக் கட்டணம் மாணவர்களிடம் வசூலிக்கப்படுகிறது. எனவே, ஏழை மாணவர்கள் கல்விக் கட்டணம் ஏதுமின்றி உயர் கல்வி பெற்றிடும் வகையில் தமிழகத்தில் உள்ள 37 கலை, அறிவியல் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை முழுமையான அரசுக் கல்லூரிகளாக தமிழக அரசு மாற்ற வேண்டும். மேலும், தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்படும் கல்லூரிகளும், அரசுக் கல்லூரிகளாகவே தொடங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment