தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்தான் மாணவர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியுமென அண்மையில் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் ஆசிரியர்கள் தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாகத்தான் கல்வி சேவை செய்து வந்துள்ளனர். அந்த காலத்தில் அதிக ஊதியம் கூட பெறாத நிலையில்தான் ஆசிரியர்கள் இருந்துள்ளனர். அந்த நிலையிலும் தங்களுடைய நிதி நிலையைக் கருத்தில் கொள்ளாமல், ஏழை மாணவர்களுக்கு தங்களுக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்திலிருந்து ஒரு பகுதியைச் செலவிட்டு அவர்களுடைய கல்விக் கண்களைத் திறந்துள்ளனர். அதனால்தான் அவர்கள் கடவுளுக்கு இணையாக கருதப்பட்டனர். ஆனால் இன்றைய நிலை அவ்வாறு இல்லை. ஆசிரியர்களுக்கு நல்ல ஊதியம் கிடைக்கிறது. அதற்காகவே அனைவரும் ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுத்து அந்தப் பணியில் சேருவதற்காக பகீரத பிரயத்தனம் மேற்கொண்டுள்ளனர். ஆனால் அந்த அளவுக்கு அவர்களிடம் அர்ப்பணிப்பு, பொறுப்புணர்வு, சேவை மனப்பான்மை ஆகியவை இல்லை. இதற்கு விதிவிலக்காகவும் சிலர் கல்வி சேவையாற்றி வருகின்றனர். கல்வி தற்போது வியாபாரமாகிவிட்டதால் ஆசிரியர்களும் வியாபாரிகளைப் போலதான் செயல்படுகின்றனர்.
தனியார் பள்ளிகள் லாபத்தை ஈட்ட வேண்டுமென்ற நோக்கத்துடன் செயல்படுவதால் குறைந்த ஊதியம் கிடைத்தாலும் அங்கு மிகவும் கண்டிப்புடன் செயல்படும் ஆசிரியர்களால் மாணவர்கள் மனப்பாடம் செய்தாவது படித்து தேர்வில் வெற்றிபெற்று விடுகின்றனர். ஆனால் அந்த மாணவர்களிடம் அனுபவ அறிவு இருப்பதில்லை. ஏட்டளவுக்குதான் அவர்களுடைய அறிவு இருக்கிறது.
ஆனால் மிகவும் மோசமான நிலையில் இருப்பது அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்தான். அதனால் உயர்நிலை மற்றும் மேல்நிலை இறுதி வகுப்பு அரசுத் தேர்வுகளில் தோல்வியைத் தழுவுகின்றனர். மத்திய அரசின் மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறையின் கீழ் மாணவர்களின் உயர்நிலைக் கல்வியை மேம்படுத்தவும், அவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும் ஆர்.எம். எஸ்.ஏ. திட்டம் அதாவது ராஷ்டிரிய மாத்யமிக் சிக்ஷô அபியான் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கென தனியாக நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் சரிவர பயிலாதவர்களுக்கென தனியாக தன்னார்வல ஆசிரியர்களை நியமனம் செய்து பள்ளி பாட வேளைக்குப் பிறகு குறிப்பிட்ட நேரம் கூடுதல் கவனம் செலுத்தி அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த திட்டத்தில் தன்னார்வல ஆசிரியர்கள் எவ்வளவுதான் முயற்சி மேற்கொண்டாலும் மாணவர்கள் தங்கள் கவனத்தை செலுத்துவதில்லை. அவர்கள் பள்ளி முடிந்த உடனே வீட்டுக்குச் சென்று விடுகின்றனர். இத்திட்டத்தினால் ஓரளவுக்குதான் மாணவர்களின் கல்வித் தரம் உயர்த்தப்படுகிறது. முழுமையான பலன் கிடைக்கவில்லையென்ற கருதப்படுகிறது.
இதற்குத் தீர்வு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கடமை, பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு கல்விச் சேவை செய்ய வேண்டும். அடிப்படையே சரியாக பயிலாதபோது உயர்நிலையில் சரியாக பயில்வார்களா என்பது சந்தேகமே. ஆகவே தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடையே தரமான கல்வி எனும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment